நியூயார்க்,கடந்த 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, குடியரசு கட்சியின் தேர்தல் நிதியை, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் முறைகேடாக கையாண்ட வழக்கில், அவரை குற்றவாளி என அறிவித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது.குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 77, கடந்த 2017 - 21 வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தார். தண்டனை
கடந்த 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அந்நாட்டைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவர், டிரம்புக்கும், தனக்கும் பாலியல் தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக கூறினார். இது, அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை மூடி மறைக்க, ஸ்டார்மி டேனியல்சுக்கு 1 கோடி ரூபாயை டிரம்ப் தரப்பு கொடுத்ததாக கூறப்பட்டது.இந்த தொகையை குடியரசு கட்சியின் தேர்தல் பிரசார நிதியில் இருந்து அவர் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டே சிக்கலுக்கு காரணமானது.இந்த குற்றச்சாட்டை மறைக்க, டிரம்ப் தரப்பு போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும் கூறப்பட்டது. அந்த 34 ஆவணங்களும் போலி என்பதை நீதிபதிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.அதை தொடர்ந்து, டிரம்ப் குற்றவாளி என, நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கான தண்டனை ஜூலை 11ல் அறிவிக்கப்பட உள்ளது.அமெரிக்க முன்னாள் அதிபர் மற்றும் அடுத்த தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஒருவரை முறைகேடு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது, அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, ஆகியோர் போட்டியிடுகின்றனர். விசாரணை
இந்த நேரத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவதில் தடை எதுவும் இருக்காது என கூறப்படுகிறது.நீதிமன்றத்தில் அமைதியாக நின்றிருந்த டிரம்ப் வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இது ஒரு மிகப் பெரிய அவமானம். இந்த மோசடியான விசாரணையை நடத்திய நீதிபதி ஒரு ஊழல் பேர்வழி. நம் தேசமே இந்த மாதிரியான மோசடியை இப்போது எதிர்கொண்டு வருகிறது.எதிர்க்கட்சியினரை பழி வாங்கும் நோக்கத்தில் பைடன் நிர்வாகம் இதை செய்துள்ளது. நம் அரசியல் சாசனத்துக்காக நாம் போராட வேண்டி உள்ளது.உண்மையான தீர்ப்பை, அதிபர் தேர்தல் நடக்கும் நாளான நவம்பர் 5ம் தேதியன்று மக்கள் அளிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த வழக்கில் வரும் ஜூலை 11ல் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதுபோன்ற நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு, அமெரிக்காவில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப், மேல் முறையீடு செய்யவுள்ளதாக, அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அந்நாட்டு அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. போட்டியிடுபவர் அமெரிக்க குடிமகனாகவும், குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. சிறையில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.