உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐந்தாவது முறை ரஷ்ய அதிபராக பதவியேற்றார் விளாடிமிர் புடின்

ஐந்தாவது முறை ரஷ்ய அதிபராக பதவியேற்றார் விளாடிமிர் புடின்

மாஸ்கோ,ஏற்கனவே, 25 ஆண்டுகளாக ரஷ்ய அதிபராக இருந்துள்ள விளாடிமிர் புடின், 2036 வரை பதவியில் தொடர வாய்ப்புள்ள நிலையில், ஐந்தாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.ரஷ்யாவின் அசைக்க முடியாத தலைவராக உள்ள விளாடிமிர் புடின், 71, அந்நாட்டின் வரலாற்றில் நீண்டகால அதிபராக உள்ளார்.

பொருளாதார தடை

கடந்த, 1999ல் பதவியேற்ற அவர், மேலும், ஆறு ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருக்கும் வகையில், ஐந்தாவது முறையாக நேற்று அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.அவருக்கு சாதகமாக ரஷ்ய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2030ல் இருந்து, மேலும் ஆறு ஆண்டுகளுக்கு அவரால் அதிபராக இருக்க முடியும்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான போர் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், நாட்டில் தனக்கு எதிரிகள் உருவாகாமல் பார்த்து கொண்டுள்ளார்.நாட்டின் அதிகாரம் மொத்தமும் அவரிடமே உள்ளது. கிரம்ளின் எனப்படும் அதிபர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் மீண்டும் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். ஜோசப் ஸ்டாலினுக்குப் பின், நாட்டின் நீண்டகால அதிபராக அவர் உள்ளார்.உக்ரைனுக்கு எதிரான போரால், இந்த பதவியேற்பு விழாவை, அமெரிக்கா, பல மேற்கத்திய நாடுகள் புறக்கணித்தன. பதவியேற்பு விழாவில் புடின் பேசியதாவது:நாம் மிகவும் கடினமான காலகட்டத்தில் உள்ளோம். வழக்கம்போல் இவற்றை கடந்து, நம் நாட்டை வலிமையானதாகவும், பெருமையானதாகவும் மாற்றுவோம். நாம் அனைவரும் இணைந்தால், இந்த சிறப்புமிக்க நாடு, எவ்விதத் தடைகளையும் தகர்ந்தெறியும். நம் இலக்குகளை நாம் எட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.கடந்த, 2022ல் உக்ரைன் மீதான போரை ரஷ்யா துவங்கியது. இதனால், அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிட்டது. அதே நேரத்தில், சீனா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளின் ஆதரவை பெற்றது.கடந்த, 2018ல் அதிபராக மீண்டும் புடின் பொறுப்பேற்றபோது, உலகின் ஐந்து பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாக ரஷ்யா விளங்கும் என்று அவர் உறுதியளித்தார்.

நடவடிக்கை

ஆனால் தொடர்ச்சியான போரால், அந்த இலக்கை எட்ட முடியவில்லை. உக்ரைனின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தாலும், தற்போது ரஷ்யா சற்று முன்னேறி வருகிறது. ஆனால், அதற்கு மிகப்பெரும் விலையை கொடுக்க நேர்ந்துள்ளது.அதனால், தன் அடுத்த ஆறு ஆண்டு ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், சர்வதேச உறவை மேம்படுத்தவும் அவர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை