உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  மியான்மர் சைபர் கிரைம் மோசடி மையம் ராணுவ சோதனையில் 350 பேர் சிக்கினர்

 மியான்மர் சைபர் கிரைம் மோசடி மையம் ராணுவ சோதனையில் 350 பேர் சிக்கினர்

நேப்பிடோ: தாய்லாந்து எல்லையில் உள்ள, 'சைபர் கிரைம்' எனப்படும் ஆன்லைன் வாயிலாக மோசடி செய்யும் மையத்தில் அதிரடி சோதனை நடத்திய மியான்மர் ராணுவம், 350க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை கைது செய்தது. 'டேட்டா என்ட்ரி' வேலை என்ற பெயரில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு ,இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். கைது ஆனால், அங்கு அவர்கள் மோசடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு, பணம் பறிப்பது, போலி கிரிப்டோகரன்சி முதலீடு, தொலைபேசியில் வங்கி ஊழியராக நடித்து மோசடி என ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. சீனாவைச் சேர்ந்த கும்பலே இந்த மோசடியை அதிகம் அரங்கேற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மியான்மர் ராணுவம், நாடு முழுதும் ஆன்லைன் மையங்களை குறிவைத்து சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபரில், தாய்லாந்து எல்லையில் உள்ள பிரபல கே.கே.பார்க்கில் நடந்த சோதனையில் 2,000த்திற்கும் மேற்பட்டவர்களை ராணுவம் கைது செய்தது. இதில், இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். பறிமுதல் இந்நிலையில், நேற்றும் தாய்லாந்து எல்லையில், 'ஷ்வே கோக்கோ' என்ற மையத்தில் ராணுவம் நுழைந்தது. அந்த மோசடி மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 350க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது. ஆனால், இவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆன்லைன் மோசடிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 10,000த்திற்கும் மேற்பட்ட மொபைல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆட்கள் சப்ளை செய்தவர் கைது சைபர் கிரைம் குற்றங்களை நடத்தும் மையங்களுக்கு, இந்தியாவில் இருந்து ஆட்களை அனுப்பிய முக்கிய குற்றவாளி குஜராத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் வேலை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு, சைபர் கிரைம் குற்றங்களில் இந்தியர்கள் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, குஜராத், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் உள்ளூர் போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். குறிப்பாக, குஜராத்தில் இருந்து மியான்மர் மற்றும் கம்போடியாவுக்கு அதிகளவில் சட்டவிரோதமாக ஆட்கள் அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்துவதில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் ஹிதேஷ் சோமையா, சோனால் பல்டு, பவ்தீப் ஜடேஜா மற்றும் ஹர்தீப் ஜடேஜா என நான்கு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், காந்திநகரில் தங்கியிருந்த முக்கிய குற்றவாளியான நிலேஷ் புரோஹித் என்ற நீல் என்பவரை போலீசார் கைது செய்தனர். கம்போடியாவுக்கு தப்பிச் செல்ல இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு கீழ், 126 இடைத்தரகர்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ