மருத்துவமனை மீது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மோதி விபத்து; மருத்துவர் உள்பட 4 பேர் பலி
அனர்கா:துருக்கியில் மருத்துவமனை மீது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் மருத்துவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். முக்லா பயிற்சி மற்றும் ஆய்வு மருத்துவமனையில் புறப்பட்ட ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில், இரு பைலட்டுகள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு மருத்துவ பணியாளர் ஆகியோர் பயணித்தனர். இவர்கள் அனைவரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து முக்லா மாகாண கவர்னர் இட்ரிஸ் அக்பியிக் கூறியதாவது: மருத்துவமனையின் 4வது தளத்தில் தான் முதலில் ஹெலிகாப்டர் மோதி தரையில் விழுந்தது. இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக யாரும் கட்டடத்தில் இல்லை. பனி காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.