உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  தேசத்துரோக வழக்கில் ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபர் குற்றவாளி என தீர்ப்பு

 தேசத்துரோக வழக்கில் ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபர் குற்றவாளி என தீர்ப்பு

ஹாங்காங்: ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபரும், ஜனநாயக போராளியுமான ஜிம்மி லாய், 78, சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட முக்கிய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங், நம் அண்டை நாடான சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக உள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்த நாடு, 1997ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சி கேட்டு, ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கோரிக்கை

ஹாங்காங்கில், 'ஆப்பிள் டெய்லி' என்ற பிரபல நாளிதழை நடத்தி வந்தவர் ஜிம்மி லாய். ஜனநாயகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ஜிம்மி லாய், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர். மற்ற நாடுகள் சீனாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் துாண்டும் சூழ்ச்சிகளுக்கு காரணமாக இருந்தார் என்பது லாய் மீதான குற்றச்சாட்டு. குறிப்பாக அமெரிக்காவிடம் சீனா மற்றும் ஹாங்காங்கிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கோரிக்கை வைத்ததாகக் கூறப்பட்டது. மேலும் அரசு மீது அதிர ு ப்தியை ஏற்படுத்தும், 161 கட்டுரைகளை அவர் எழுதியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஹாங்காங்கில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஜனநாயக ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது. இதையடுத்து 2020-ல் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு, ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டார்.

கண்டிப்பு

இந்த வழக்கு ஹாங்காங்கின் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்று விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், வெளிநாட்டு கூட்டு சதி மற்றும் தேசத் துரோக வழக்கில், ஜிம்மி லாய் குற்றவாளி என ஹாங்காங் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும். ஜிம்மி லாய் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளாக தனிமைச் சிறையில் உள்ளார். அவருக்கு, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்தத் தீர்ப்பை கண்டித்துள்ளன.

மூடப்பட்ட ஆப்பிள் டெய்லி!

ஹாங்காங்கில் பிரபல நாளிதழான ஆப்பிள் டெய்லி, 1995ம் ஆண்டு தொழிலதிபர் ஜிம்மி லாயால் துவங்கப்பட்டது. சீன வட்டார மொழியில் வெளியிடப்பட்ட இந்த நாளிதழ், ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் வலுவான குரலாக விளங்கியது. சீனா மற்றும் ஹாங்காங் அரசுகளை கடுமையாக விமர்சித்தது. இதனால், பல விளம்பரத் தடைகள் மற்றும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டது. கடந்த 2020ல் ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் பெரும் நெருக்கடிக்கு ஆளானது. அதன் இறுதி பதிப்பு 2021 ஜூன் 24ம் தேதி வெளியானது. வழக்கமாக 80,000 பிரதிகள் அச்சிடப்படும் இடத்தில் இறுதி நாளில், 10 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டன. வாசகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டதால் இயங்க முடியாமல் போனது.

கடைசி எதிர்க்கட்சியும் கலைப்பு

சீனாவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு இடையே, ஹாங்காங்கின் கடைசி முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை கலைக்க அதன் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இது 1994-ல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்களால் துவங்கப்பட்டது. ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும், சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுமே இதன் முக்கிய கொள்கையாக இருந்தது. ஆனால், 2020ல் அமல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2021ல் தேர்தல் முறையில் செய்யப்பட்ட மாற்றங்கள், கட்சியை பெரிதும் பாதித்தன. இந்நிலையில், ஹாங்காங்கில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த ஜனநாயகக் கட்சியின் தலைவர் லோ கின்-ஹெய், கட்சியை கலைப்பதாக அறிவித்தார். கட்சி நிர்வாகிகளின், 121 ஓட்டு களில் கலைப்புக்கு ஆதரவாக 117 இருந்தன. நான்கு ஓட்டுகளில், எந்தக் கருத்தும் கூறப்படவில்லை.கட்சியை கலைக்காவிட்டால், கைது உள்ளிட்ட கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சீன அதிகாரிகள் எச்சரித்ததே, இந்த கலைப்புக்கு காரணம் என சில மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை