உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் போர் நிறுத்தம் இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்பந்தம்

காசாவில் போர் நிறுத்தம் இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்பந்தம்

ஜெருசலேம், பாலஸ்தீனத்தின் காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை நிறுத்த ஹமாஸ் - இஸ்ரேல் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.இதையடுத்து துவங்கிய இஸ்ரேல் -- ஹமாஸ் போர், 15 மாதங்களாக நீடித்து வந்தது. காசாவில் 46,000 பேர் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் கடந்த சில மாதங்களாக முயற்சித்து வந்தன. அமெரிக்க அதிபராக வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ள டிரம்ப், விரைவில் போரை நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், காசாவில் சண்டையை நிறுத்தவும், இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கவும், பதிலுக்கு பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளன.இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் ஆறு வாரங்கள் போர் நிறுத்தம், அதன் பின் காசா எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும்.இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து, அமெரிக்க அதிபராக பதவி ஏற்கவுள்ள டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'மேற்காசியாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் விவகாரத்தில் சமரசத்தை எட்டியுள்ளோம். விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவர்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ