எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் இலங்கை அரசை கவிழ்ப்போம் ராஜபக்சே மகன் நமல் எச்சரிக்கை
கொழும்பு: ''எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், இலங்கை அரசை கவிழ்ப்போம்,'' என, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில், 2024ல் நடந்த அதிபர் மற்றும் பார்லி., தேர்தலில், அனுர குமார திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அவரது அரசு, முந்தைய ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிபர் அனுர குமார திசநாயகே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி, கொழும்பின் புறநகர் பகுதியான நுகேகோடாவில், பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் நேற்று மாபெரும் பேரணி நடந்தது. இதில் மஹிந்த ராஜபக்சே மகனும், முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சே பேசுகையில், ''ஓராண்டாகியும் தேர்தல் வாக்குறுதியை அதிபர் அனுர குமார திசநாயகே நிறைவேற்றவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் எதிர்க்கட்சி நிர்வாகிகள் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். ''இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். அரசை கவிழ்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தயக்கமின்றி செய்வோம்,'' என்றார். பார்லி.,யில் அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது.