உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மற்றொரு நாடு ஆப்கன் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா பதிலடி

மற்றொரு நாடு ஆப்கன் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா பதிலடி

மாஸ்கோ:ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமான தளத்தை அமெரிக்கா குறி வைத்துள்ள நிலையில், அந்த நாட்டின் நிலத்தை மற்றொரு நாடு பயன் படுத்த அனுமதிக்க விட மாட்டோம் என, ரஷ்யா கூறியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பு, 2021ல் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றியது. நெருக்கடி பல நாடுகள் இன்னும் தலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை. கடந்த ஜூலையில் முதல் நாடாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அங்கு அமைதி, நிலைத்தன்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட அமைப்பே 'மாஸ்கோ பார்மட் கன்சல்டேசன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான்!' இந்த அமைப்பில் ஆப்கானிஸ்தான், ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த அமைப்பின் 7வது ஆலோசனைக் கூட்டம் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. இக்கூட்டத்திற்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமை வகித்தார். நடப்பு அமர்வில், பெலாரஸ் நாட்டின் பிரதிநிதிகள் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப் படை தளத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறினார். இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கு அவர் நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்நிலையில், இந்தக்கூட்டத்தில் லாவ்ரோவ் பேசியதாவது: பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த, தலிபான் அரசு அரசியல் செயல்முறைகள், பலதரப்பு செயல்பாடுகள் மற்றும் கூட்டு பொருளாதார திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபடுவது அவசியம். எந்த ஒரு சாக்குப்போக்கின் கீழும் ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடுகளில் மூன்றாம் தரப்பு ராணுவ உள்கட்டமைப்பை நிலைநிறுத்துவதை ரஷ்யா உறுதியாக நிராகரிக்கிறது. பிராந்தியத்திற்கு அப்பாற்பட்டவர்களின் ராணுவத்தை நிறுத்தினால் ஸ்திரத்தன்மைக்கும், புதிய மோதல்களுக்கும் அது வழிவகுக்கும். உதவி தொடரும் ஆப்கா னிஸ்தானின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க அந்த நாட்டுக்கு, உலக நாடுகள் உதவ வேண்டும். மனிதாபிமான உதவிகளுக்கு அரசியல் நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. ரஷ்யா தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் தலிபான் நிர்வாகத்தின் சார்பில், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சரான அமீர் கான் முட்டகி கலந்து கொண்டார். உறுப்பு நாடுகளில் உயர்மட்ட பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ