|  ADDED : ஜூலை 06, 2025 11:48 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
மேட்ரிட்: அரசு ஒப்பந்தத்தை வழங்க லஞ்சமாக பணம் மற்றும் பாலியல் தொழிலாளிகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆளுங்கட்சியினர் பாலியல் தொழிலாளிகளிடம் செல்ல கூடாது என ஸ்பெயின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான சோஷலிச கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சியின் மூன்றாம் நிலை தலைவராக இருந்தவர் சான்டோஸ் செர்டன், பொதுப்பணி ஒப்பந்தங்களை வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த புகாரில் இவரை கைது செய்தனர். மேலும், லஞ்சமாக பணம் மட்டுமின்றி பாலியல் தொழிலாளிகளையும் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது அரசுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் பிரதமர் சான்செசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்தி உள்ளன.பிரதமர் சான்செசின் பதவிக்காலம் 2027 வரை உள்ளது. அவர் நடந்த சம்பவத்திற்கு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று நடந்த கட்சி கூட்டத்தில், பேசிய பிரதமர் சான்செஸ், ''கட்சியினர் பணத்திற்கு ஈடாக பாலியல் செயல்களை ஏற்றுக்கொண்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்.''ஒரு பெண்ணின் உடல் விற்பனைக்கு இல்லை என்பது நம் கொள்கை. அதற்கு முரணான நடத்தையை கட்சியால் அனுமதிக்க முடியாது,'' என்றார்.