உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஐ.நா.,வில் பாக்., பிரதமர் பேச்சுக்கு இந்தியா பதிலடி!: விளைவை சந்திப்பீர்கள் என எச்சரிக்கை

 ஐ.நா.,வில் பாக்., பிரதமர் பேச்சுக்கு இந்தியா பதிலடி!: விளைவை சந்திப்பீர்கள் என எச்சரிக்கை

நியூயார்க்:ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா., பொதுச்சபையில் குறிப்பிட்ட பாகிஸ்தானுக்கு, 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் நாடு அதற்கான விளைவுகளை விரைவில் சந்திக்கும்' என, இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.ஐ.நா.,வின் 79வது பொதுச்சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வருகிறது.இதில் நேற்று முன்தினம் பேசிய நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டார்.'பாலஸ்தீனத்தில் நடக்கும் அட்டூழியங்களைப் போல, ஜம்மு - காஷ்மீரிலும் நடக்கிறது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை 2019ல் நீக்கியது சரியான நடவடிக்கை அல்ல.

குற்றச்சாட்டு

'அதை திரும்ப வழங்க வேண்டும். இரு தரப்பு பிரச்னைகளுக்கு பேச்சு நடத்த இந்தியா முன் வர வேண்டும்' என, ஷெபாஸ் ஷெரீப் பேசினார். இதற்கு, பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி, ஐ.நா.,வுக்கான இந்திய துாதரகக் குழுவின் முதல் செயலர் பாவிகா மங்களானந்தன் பேசியதாவது:இந்த சபை, ஒரு கேலிக்குரிய பேச்சைக் கேட்க நேரிட்டது. பயங்கரவாதத்தால் நடத்தப்படும், உலக அளவில் பயங்கரவாத ஆதரவு நாடு என்று பெயர் பெற்ற, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல நாடுகளில் பயங்கரவாத குற்றங்களை நடத்தும் நாடு, உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதில் இருந்து, பாகிஸ்தானின் உண்மையான முகம் என்ன என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டிருக்கும்.பயங்கரவாத ஆதரவு நாடு என்று பெயர் பெற்றுள்ள ஒரு நாடு, எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி பேசியிருக்க முடியும். உலகெங்கும் பல நாடுகளில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் இந்த நாட்டுக்கு தொடர்பு இருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், இதுபோன்ற நாட்டின் பிரதமர், இங்கு பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதே நேரத்தில், அவரது பேச்சு ஏற்புடையதல்ல என்பதை நாம் உணர்த்த வேண்டியுள்ளது.தொடர்ந்து பொய்களையே பேசி, உண்மையை மறைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருவது நமக்கு நன்கு தெரியும். இவ்வாறு தொடர்ந்து பொய்களை கூறுவதால், உண்மையை மாற்ற முடியாது. எங்களுடைய நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது.

மோசமான பின்னணி

பயங்கரவாதம் முழுமையாக நிறுத்தப்படாத வரையில், பாகிஸ்தானுடன் பேச்சு என்பதற்கு சாத்தியமே இல்லை. பயங்கரவாதத்துடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இல்லை.அந்த நாட்டில் மனித உரிமைகள் எந்தளவுக்கு மீறப்படுகிறது, சிறுபான்மையினர் மீது எந்தளவுக்கு தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது உலகுக்கு தெரிந்த விஷயம். இவ்வளவு மோசமான பின்னணி உள்ள நாடு, அமைதி குறித்தும், பயங்கரவாதம் குறித்தும் பாடம் எடுப்பது மிகவும் கேலிக்குரியதாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இந்தியாவின் பேச்சு ஆதாரமற்றது என பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்தி பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளதாகவும், ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தெரிவிக்கிறது.

தொடரும் ஆதரவு!

ஐ.நா.,வில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது.ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற பிரிட்டன் மற்றும் பிரான்ஸ், தங்களது ஆதரவை தெரிவித்திருந்தன.இந்நிலையில், நேற்று பொதுச்சபையில் பேசிய, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே, போர்ச்சுக்கல் பிரதமர் லுாயிஸ் மோன்டெனக்ரோ ஆகியோரும், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.'உலகின் தற்போதைய தேவைக்கு ஏற்ப, ஐ.நா., தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம், மக்கள் தொகை, குளோபல் சவுத் எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ளது போன்ற பல காரணங்களால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர, இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன' என, ஷெரீங் தோப்கே குறிப்பிட்டார்.'சர்வதேச நிர்வாக முறையின் நம்பகத்தன்மை, பொறுப்புடைமை உள்ளிட்டவற்றை உறுதி செய்ய, பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை. ஆப்ரிக்கா, பிரேசில், இந்தியா ஆகியவை நிரந்தர உறுப்பினராக்கப்பட வேண்டும்' என, போர்ச்சுக்கல் பிரதமர் லுாயிஸ் மோன்டெனக்ரோ குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை