பிறப்பால் கிடைக்கும் குடியுரிமை ரத்துக்கு தடை விதித்தது அமெரிக்க நீதிமன்றம்
வாஷிங்டன், பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து, அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு, சீயாட்டல் நீதிமன்றம் காலவரையற்ற தடை விதித்து உத்தரவிட்டது.அமெரிக்க அரசியல் சாசனத்தில், 1868-ல் மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை தொடர்பான, 14-வது திருத்தத்தின்படி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அந்நாட்டின் குடியுரிமையை பெறுகின்றனர். அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அமெரிக்கராக இல்லாவிட்டாலும்கூட, அந்தக் குழந்தைக்கு குடியுரிமை உண்டு.இந்நிலையில், பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக, பதவியேற்ற முதல் நாளில் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். 'அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்' என உத்தரவில் தெரிவித்தார்.டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து, அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. டிரம்பின் உத்தரவுக்கு, மேரிலாண்ட் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்நிலையில், சீயாட்டல் நீதிமன்றமும் தற்போது தடை விதித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கோஹெனுார் பிறப்பித்த உத்தரவு: அரசியலமைப்புடன், தங்கள் கொள்கை விளையாட்டுகளை அரசு விளையாடக் கூடாது. பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்ய வேண்டுமெனில், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும். நானும், இந்த நீதிமன்றமும் சட்டத்தின் ஆட்சியை மட்டுமே பின்பற்ற விரும்புகிறோம். எனவே, அதிபரின் உத்தரவுக்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவால், 'எச்1பி, எல்1, எச்4' உள்ளிட்ட விசாக்களில் வசிக்கும் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மார்ச்சில் துவங்குது எச்1பி விசா பதிவு
தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்பு துறைகளில், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்த எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்தியர்கள் மற்றும் சீனர்கள் பெரும்பாலும் இந்த விசாவில் தான் அமெரிக்கா செல்கின்றனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தான் விசா பெரும்பாலும் பயன்படுகிறது.இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான எச்1பி விசாவுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 7ம் தேதி, இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு துவங்கி, மார்ச் 24 இரவு 10:30 மணிக்கு முடிவடைகிறது.