உள்ளூர் செய்திகள்

நொய்டா சங்கர மடத்தில் ஆஷாட ஏகாதசி

நொய்டா விஷ்ணு சகஸ்ரநாம மண்டலியினர் ஆஷாட ஏகாதசியை சிறப்பு பஜனைகள் ஏற்பாடு செய்து கொண்டாடினர்.இந்நிகழவு நொய்டா சங்கரமடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .பஜனையை தொடர்ந்து அனுமன் சாலீசா ஆரத்தி என பக்தர்கள் பங்கேற்று பரவசம் அடைந்தனர். திதிகளையொட்டி அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் முக்கியமானது ஏகாதசி விரதம். மாதம்தோறும் இரண்டு முறை வரும் ஏகாதசி விரதத்தில், வியாச பூர்ணிமாவுக்கு முன்னதாக வருவது, 'ஆஷாட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளை பத்ம ஏகாதசி என்றும் அழைப்பர் தேவர்களுடன் சயனத்திற்கு பகவான் விஷ்ணு செல்லும் நேரமாக இந்த ஏகாதசி வரும் நேரம் இருப்பதால் இந்த ஏகாதசிக்கு தேவசயன ஏகாதசி எனப்பெயர் வந்தது. இந்த ஏகாதசி நாளில்தான் பகவான் விஷ்ணு, யோக சயனம் மேற்கொண்டு, நான்கு மாதங்கள் கழித்து கார்த்திகை மாதம் ஏகாதசியன்று கண்விழிப்பதாகவும் ஐதீகம். இந்த நான்கு மாத காலத்தில் சந்நியாசிகள், 'சாதுர்மாஸ்ய விரதம்' அனுஷ்டிப்பது நடைமுறை. சாதுர்மாஸ்ய விரதத்தை 'வியாச பூர்ணிமா' என்று அழைக்கப்படும் குரு பூர்ணிமா அன்று தொடங்குவார்கள்.இந்த ஆஷாட ஏகாதசி நாளில்தான் பகவான் கிருஷ்ணர், ருக்மிணி தேவியுடன் விட்டலனுக்காகப் பாண்டுரங்கனாகக் காட்சி அளித்தார். எனவே, ஆஷாட ஏகாதசி பண்டரிபுரத்தில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது இந்தியாவின் பல பாகங்களில் இருந்து பக்தர்கள் நடைபயணமாக பண்டரிபுரம் செல்வதை நாம் பார்க்கிறோம் புண்டரீகன் பெற்றவர்களிடம் வைத்திருக்கும் அன்பு மற்றும் பக்தியின் சிறப்பை உலக மக்களுக்கு உணர்த்த விரும்பிய பகவான் கிருஷ்ணர், ஒருநாள் புண்டரீகனின் குடிசைக்கு வந்தார். குடிசையின் வாசலில் இருந்தபடி, “நான் கிருஷ்ணன் வந்திருக்கிறேன். உள்ளே யாரும் இல்லையா?'' என்று கேட்டார். உள்ளே பெற்றவர்களின் சேவையில் ஈடுபட்டிருந்த புண்டரீகன், “நீர் யாராக இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நான் பெற்றவர்களின் சேவையில் ஈடுபட்டிருக்கிறேன். அதை முடித்துவிட்ட பிறகுதான் உன்னைக் கவனிக்க முடியும்'' என்று சொல்லி, ஒரு செங்கல்லை எடுத்து வாசல் பக்கமாக வீசினான். பகவான் கிருஷ்ணரும் பக்தனுக்காக அந்தச் செங்கல்லின் மேல் ஏறி நின்றுகொண்டார்.வெகுநேரம் சென்ற பிறகுதான் புண்டரீகன் வெளியில் வந்தான். கிருஷ்ண பகவானைக் கண்டதும், பக்திப் பரவசம் மேலிட, ''ஐயனே, தங்களையா இத்தனை நேரம் காக்க வைத்தேன்? தாங்கள் நிற்பதற்காவா நான் செங்கல்லை எடுத்து வீசினேன்?'' என்று கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டான். “புண்டரீகா, கவலை வேண்டாம். பெற்றவர்களுக்கு அன்புடன் செய்யும் சேவை என்பது தெய்வத்துக்குச் செய்யும் சேவையைவிடவும் உயர்ந்தது. இந்த உண்மையை உலக மக்களுக்கு உணர்த்தவே நான் இப்படி ஒரு லீலையைச் செய்தேன். இனி இந்த இடம் பண்டரிபுரம் என்று அழைக்கப்படும். உன்னையும் எல்லோரும் விட்டல் என்று அழைத்து, உன்னிடம் என்னையே தரிசிப்பார்கள். பெற்றவர்களுக்கு நீ செய்த சேவையினால், மகத்தான புண்ணியத்தை நீ அடைந்து விட்டாய். அதன் மூலம் இங்கு வந்து தரிசிப்பவர்களின் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளும் நிலைத்திருக்கச் செய்வாய்'' என்று அருளினார். ஸ்ரீ பாண்டுரங்கனின் சிறந்த பக்தர்களான ஸ்ரீ துக்காராம் மகாராஜ் அவர்களும் ஸ்ரீ ஞானேஸ்வரரும் தமது பக்தர்களுடன் ஸ்ரீ பாண்டுரங்கனை தரிசிக்க பல மைல்கள் பாத யாத்திரையாக (150 - 200 கிமீ மேல்) வந்து பண்டரிபுரம் அடைந்த நாள் ஆஷாட ஏகாதசி நாளாகும் . ஓவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில் மராட்டிய மாநிலம் தேஹு என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ.துகாராம் அவர்களின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு ஏராளமான பக்தர்களுடன் பண்டரிபுரம் நோக்கி வருகிறது. பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீ துக்காராம் மஹாராஜூடனேயே பாடிக்கொண்டு வருவதாக பாவித்து பாண்டுரங்கன் மேல் பல பாடல்களை பாடிக்கொண்டு (இவற்றை அபங்கங்கள் என்று கூறுகிறார்கள்) அந்த பல்லக்கை தொடர்ந்து வருகிறார்கள். இதுபோலவே மராட்டிய மாநிலம் ஆலந்தி என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ ஞானேஸ்வரரின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு பக்தர்களுடன் புறப்படுகிறது. இவை சரியாக ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரம் சென்று சேரும் வகையில் பல நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வருகிறது. ஆங்காங்கே பல ஊர்களிலிருந்தும் மக்கள் வழியில் சேர்ந்துகொள்ள பக்தர்கள் வெள்ளம் ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரத்தில் பிரவேசிக்கிறது, பாண்டுரங்கனின் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டு. ஸ்ரீ.துக்காராம் மஹராஜ் கி ஜே ! ஸ்ரீ ஞானேஸ்வர் மஹராஜ் கி ஜே ! ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்க மஹராஜ் கி ஜே !!என கோஷம் எழுப்பி பக்தியுடன் நடந்து செல்லும் காட்சி நம்மை பரவசப்படுத்தும். பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் பாண்டுரங்கனாகக் கோயில்கொண்ட நாள்தான் ஆஷாட ஏகாதசி. இந்த நாளில் நாம் விரதம் இருந்து பகவானை வழிபட்டால், அளவற்ற நன்மைகளைப் பெறலாம். எல்லாவற்றையும்விட நாம் நம்மைப் பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாமல், நம்முடனே வைத்திருந்து அன்புடன் போற்றிப் பாதுகாத்துவந்தால், இறைவனின் திருவருள் நமக்குப் பூரணமாகக் கிடைக்கும்.- நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !