உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / கம்பாலா புறக்கணிப்பு மக்கள் வருத்தம்

கம்பாலா புறக்கணிப்பு மக்கள் வருத்தம்

இம்முறை தசரா திருவிழாவில், கம்பாலா விளையாட்டை ஏற்பாடு செய்ய வேண்டாமென, மாநில அரசு முடிவு செய்து விட்டது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடலோர பகுதியில் பிரபலமான விளையாட்டு கம்பாலா. சேற்றில் எருமை மாடுகளுக்கு இடையே நடக்கும் ஓட்டப் பந்தயமே கம்பாலா என அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஆண்டுதோறும், தட்சிண கன்னடாவில் நடப்பது வழக்கம். சில மாதங்களுக்கு முன், பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை மக்கள் வெகுவாக ரசித்தனர். பெங்களூரில் வசிக்கும், கடலோர மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெங்களூரில் வெற்றி அடைந்ததால், பிற மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என, கம்பாலா பிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மைசூரு தசராவில் கம்பாலா ஏற்பாடு செய்யும்படி பலரும் கருத்து தெரிவித்தனர். துணை முதல்வர் சிவகுமார், மைசூரு வந்திருந்தபோது, 'தசரா விளையாட்டு போட்டிகளில் கம்பாலா போட்டியும் நடத்தப்படும்' என்றார். மைசூரில் வசிக்கும் கடலோர பகுதி மக்கள், மிகவும் மகிழ்ந்தனர். 'கம்பாலாவை பார்க்க சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது இல்லை. மைசூரிலேயே பார்க்கலாம்' என, குஷியாக காத்திருந்தனர். இதற்கு முதல்வர் சித்தராமையா, முட்டுக்கட்டை போட்டுள்ளார். 'இம்முறை தசராவில் கம்பாலா நடத்துவது சரியாக இருக்காது. விளையாட்டுப் போட்டிகளின் பட்டியலில் கம்பாலாவை சேர்க்க வேண்டாம்' என, முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மைசூரு மாவட்ட நிர்வாகம் கம்பாலாவுக்கு, முன்னேற்பாடு ஏதும் செய்யவில்லை. மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 'கடலோர பகுதிகளின் பாரம்பரிய விளையாட்டை மற்ற மாவட்டங்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும். மைசூரு தசராவில் கபடி, மல்யுத்தம், ஈட்டி எறிதல், கால் பந்து என பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. 'அதே போன்று கம்பாலாவையும் நடத்த வேண்டும். ஏற்கனவே பெங்களூரில் நடத்தி மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மைசூரு தசராவில் நடத்தினால் வெளிநாட்டவரும் இதை பார்த்து ரசிக்க, வாய்ப்பு கிடைக்கும்' என, பலரும் ஆலோசனை கூறியுள்ளனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !