- நமது நிருபர் - கர்நாடகாவின் கடலோரம் மற்றும் மலைப்பகுதிகளில், பலாப்பழத்துக்கு முக்கியத்துவம் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பலாப்பழ இட்லி, மிகவும் பிரபலம். இந்த இட்லி மிகவும் சுவையானதாகும். இதை எப்படி தயாரிப்பது என, பார்க்கலாமா... தேவையான பொருட்கள் l அரிசி ரவை - 1 கப் l தேங்காய் துறுவல் - 1 கப் l பலாப்பழம் சுளைகள் - இரண்டரை கப் l வெல்லம் - அரை கப் l ஏலக்காய் - நான்கைந்து l உப்பு - 1 சிட்டிகை l நெய் - தேவையான அளவு செய்முறை அரிசி ரவை இல்லையென்றால், வீட்டிலேயே தயார் செய்யலாம். அரிசியை கழுவி ஒரு மணி நேரம், நீரில் ஊற வைக்கவும். பின், நீரை வடிக்கவும். அரிசியை சுத்தமான துணி அல்லது டவல் மீது பரப்பி உலர விடுங்கள். உலர்ந்த பின், மிக்சியில் கொறகொறப்பாக அரைக்கவும். இதுவே அரிசி ரவையாகும். பலாப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் போடவும். பலாப்பழ துண்டுகளுடன் வெல்லம், தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். இதில் அரிசி ரவை, ஒரு துளி உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். இட்லி தட்டில் நெய் தடவி, அதில் இந்த மாவை ஊற்றி, 25 முதல், 30 நிமிடம் ஆவியில் வேக வைத்தால், சுவையான பலாப்பழ இட்லி தயார். சூடாக நெய் தொட்டு சாப்பிட்டால், சுவையாக இருக்கும். விருப்பம் இருந்தால், முந்திரிப்பருப்பு, பாதாமை சிறு, சிறு துண்டுகளாக்கி, நெய்யில் வறுத்து, பலாப்பழ இட்லி மீது, துாவி வேக வைக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.