உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / ஆண்களுக்கு நிகராக மீன்பிடி தொழிலில் அசத்தும் பிராப்தி

ஆண்களுக்கு நிகராக மீன்பிடி தொழிலில் அசத்தும் பிராப்தி

அசைவ உணவில் மிக முக்கியமானதாக மீன் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீனை விரும்பி சாப்பிடுவர். ஆனால் கடலில் இருந்து மீனை கரைக்கு கொண்டு வருவதற்கு, மீனவர்கள் படும் கஷ்டம் யாருக்கும் தெரிவது இல்லை. கடல் சீற்றம், வெப்ப அலை உட்பட பல பிரச்னைகளை சமாளித்து கடலில் இருந்து மீன்பிடித்து வருகின்றனர். கடலுக்குள் செல்லும் மீனவர்கள் உயிருடன் கரைக்கு திரும்பி வருவரா என்று, நிச்சயம் இல்லாத சூழ்நிலையும் உள்ளது. மிகவும் சவாலாக உள்ள மீன்பிடி தொழிலில், ஆண்களுக்கு நிகராக 27 வயதே ஆன இளம்பெண் ஒருவரும் அசத்தி வருகிறார்.

முதுகலை பட்டம்

தட்சிண கன்னடாவின் மங்களூரு அருகே பைங்கெரே கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மென்டன். இவரது மகள் பிராப்தி, 27. மீன்வள அறிவியல் படிப்பில் 'முதுகலை பட்டம்' பெற்று உள்ளார். இவர், சக மீனவர்களுடன் கடலுக்குள் சென்று மீன்பிடித்து கரைக்கு கொண்டு வருகிறார். நடுக்கடலில் மீனை பிடிக்க வலையை வீசுகிறார்.இதுகுறித்து பிராப்தி கூறியதாவது:எனது தந்தை ஜெயபிரகாஷ். மீன்பிடி தொழில் செய்கிறார். தற்போது நைஜீரியாவில் உள்ளார். எனக்கும் சிறு வயதில் இருந்தே மீன்பிடிக்கும் ஆசை இருந்தது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் என்ன ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, மீன்வளம் தொடர்பாக படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.தற்போது மீன்வள அறிவியலில் முதுகலை பட்டம் பெற்று உள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக மீனவர்களுடன் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகிறேன். எனது விருப்பத்திற்கு குடும்பத்தினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடலுக்குள் சென்று மீன்பிடிக்க வலை வீசுவதில் எனக்கு அலாதி பிரியம் உண்டு. தற்போது வெயில் அடித்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில், உப்பு காற்றுக்கு உடலின் நிறம் மாறுகிறது.

தண்ணீர் குடிப்பதில்லை

கனமழை பெய்யும் போது, கடல் சீற்றம் காரணமாக படகை இயக்குவது சவாலாக இருக்கும். இருந்தாலும் சவால்களை சமாளிப்பது எனக்கு பிடிக்கும். தைரியம் இருந்தால், பெண்கள் எதையும் சாதிக்கலாம். நான் மீன்பிடிக்க செல்லும் படகில், கழிப்பறை வசதி இல்லை. இதனால் கடலுக்குள் செல்லும் போது, தண்ணீர் குடிக்க மாட்டேன். கரைக்கு மீனை கொண்டு வந்து சேர்த்த பின் தான், எனக்கு நிம்மதியாக இருக்கும்.ஆண்களை போல பெண்களும் ஒரு குழுவாக இணைந்து, கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டும் எனது விருப்பம். மீன்வள அறிவியல் படிப்பு மூலம், மீனவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை