முதல்வரே... ஒரு நிமிஷம்!
காத்திருந்து... காத்திருந்து...செய்தி: 'டிட்வா' புயல் மழையில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் பலி! அநீதி: பலியானவருக்கு சேர வேண்டிய 'முதிர்வு தொகை'க்கு போராடும் குடும்பம்! முதல்வரே... கும்பகோணம், ஆலமன்குறிச்சி கிராமத்தில் பெற்றோருடன் வசித்துவரும் என் பெயர் கனிமொழி, வயது 21. நவம்பர் 29, 2025; 'டிட்வா' புயல் தந்த தொடர் மழையால் இரவு 11:30 மணியளவில் எங்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், என் பெற்றோர் முத்துவேல் - சீதா, தங்கை ரேணுகாவோடு நானும் படுகாயமுற்றேன். இத்துயர சம்பவத்தில் என் தங்கை இறந்து விட்டாள். டிசம்பர் 2ம் தேதியன்று, 'பேரிடர் நிவாரண நிதி'யாக ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வீடு தேடி வந்து தந்த தமிழக அரசு, இப்போதுவரை என் தங்கைக்கு சேர வேண்டிய, 'முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்' சார்ந்த முதிர்வு தொகை தராது இழுத்தடிக்கிறது. இதனை உடனடியாக தரச்சொல்லி அப்போதைய எம்.எல்.ஏ., பரிந்துரைத்த கடிதத்தை, டிசம்பர் 20ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டோம். இதனோடு, தங்கையின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் மார்ச் 28, 2007 தேதியிட்ட 'தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம்' வழங்கிய வைப்புத்தொகை எண்: CAA 302906 ரசீதையும் இணைத்துள்ளோம்; இன்னும் பலனில்லை! நிகழ்ந்த விபத்தால் அப்பா வீட்டோடு முடங்கி விட்டார். அம்மாவின் விவசாய கூலியில்தான் அன்றாட வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அன்று எங்களுக்கு அண்ணனாய் வந்து ஆறுதல் த ந்த தற்போதைய கும்பகோணம் எம்.எல்.ஏ.,வும் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சருமான ஆர்.வினோத்திடம், இப்போது எங்கள் சிரமத்தைச் சொல்லி உடனடியாய் குறைதீர்க்கச் சொல்வீர்களா?