உள்ளூர் செய்திகள்

அன்புள்ள பாடகர்: பெண் குரல் தந்த வாழ்விது

'ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்... சரவணபவ குகா சரணம்...' சூலமங்கலம் சகோதரிகளின் இக்குரலை நினைவூட்டுவது போல் 'கந்த குரு கவசம்' பாடும் நலிவுற்ற கலைஞரான பழநி பாலகிருஷ்ணன் மனதில் இன்றும் இரு கேள்விகள்... * பிரபல பாடகியர் குரலில் பாடி கைதட்டல் பெறுவது சாதனையா? * புகழ்பெற்ற பாடகியரின் நகலாக அறியப்படுவது புகழ் சேர்க்குமா? முருகனின் ஆசிர்வாதம் என் சின்ன வயசுல எங்க பாப்பம்பட்டி ராமர் மடத்துல என்னை பஜனை பாட வைச்சார் அப்பா. வீட்டுல அம்மா கூட சேர்ந்து, 'கந்த சஷ்டி கவசம்' பாடுவேன். என் 18 வயசுல பழநி கச்சேரியில, 'ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த முகம் ஆறு...' பாடலை சூலமங்கலம் சகோதரிகள் குரல்ல கேட்டதும் அப்படி ஒரு சிலிர்ப்பு. அன்னைக்கு ராத்திரியே அந்த குரல்ல பாட முயற்சி எடுத்தேன். முருகன் அருளால கிட்டத்தட்ட அந்த குரல் எனக்குள்ளே இருந்து வந்தது! ஒருநாள், ஐவர்மலை குழந்தை வேலப்பர் சன்னதியில, 'கந்த குரு கவசம்' பாட வாய்ப்பு கிடைச்சது. பாடி முடிச்சதும், பக்கத்து வீட்டு ராஜம்மாள் அம்மா, 'உன் பிறப்போட நோக்கமே முருகன் புகழ் பாடுறதுதான்'னு கண்கலங்க ஆசிர்வாதம் பண்ணினாங்க! வார்த்தை வரவில்லை அதுக்கப்புறம், 1993ல் பணி நிமித்தமா கோவைக்கு போயிட்டேன். அங்கே, பேரூர் பட்டீஸ்வரர் கோவில்ல பாடுற வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து பண்ணாரி, பவானி, அந்தியூர் கோவில் கச்சேரிகள்ல பாடினேன். இப்படி நிறைய கோவில்கள்ல பாடுறது ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் மனசுக்குள்ளே ஒரு குறை! 'சூலமங்கலம் சகோதரிகளை சந்திச்சு, அவங்க முன்னால 'கந்த குரு கவசம்' பாடிக் காட்டணும்'ங்கிறது என் ஆசை; சென்னையில ஒரு கச்சேரிக்கு வந்தப்போ அவங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. ஆனா, நேர்ல பார்த்ததும் வார்த்தையே வரலை... அப்புறம் எங்கே பாடுறது; ஆசிர்வாதம் மட்டும் வாங்கிட்டு திரும்பிட்டேன்! அந்த ஒரு ஏக்கம் பிரபல பாடகர் பித்துக்குளி முருகதாஸ் ஒரு நிகழ்ச்சியில நான் பாடினதை கேட்டுட்டு, 'நீங்க அடுத்த கட்டம் போக சூலமங்கலம் சகோதரிகளை சந்திக்கணும். உங்க திறமைக்கு கண்டிப்பா அவங்க குழுவுல சேர்த்துப்பாங்க'ன்னு சொன்னார். ப்ப்ச்ச்ச்... என்னோட எந்த முயற்சியும் கைகூடலை! இன்னைக்கு, எனக்கு 70 வயசாயிருச்சு. 'பிரபல பாடகர் அந்தஸ்து கிடைக்கலையே'ங்கிற வருத்தமெல்லாம் இல்லை. 'சூலமங்கலம் சகோதரிகள் முன்னாடி நம்மால கவசம் பாட முடியலையே'ங்கிற ஏக்கம் மட்டும் இருக்கு! இப்பவும் சில கோவில் கச்சேரிகள்ல, 'கந்த குரு கவசம்' பாடிட்டு இறங்குறப்போ சிலர் கண்கலங்கி வணங்குறாங்க; அந்த தருணங்கள்ல சூலமங்கலம் சகோதரிகளுக்கு மனதார நன்றி சொல்லிக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !