முதல்வரே... ஒரு நிமிஷம்
செய்தி: பாதாள சாக்கடை பணியின்போது மண்ணுக்குள் புதைந்த தொழிலாளி! அநீதி: கண்டுகொள்ளாத அரசு கட்டுமான தொழிலாளர் நலவாரியமும், தனியார் ஒப்பந்த நிறுவனமும்!அரசே... திருப்பத்துார் கொடுமாம்பள்ளி, கோடியூர் கிராமத்தைச் சேர்ந்த நான் மலர்; துாய்மை பணியாளர். என் கணவர் அன்பு, கட்டுமான தொழிலாளி. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் அவரது உறுப்பினர் எண்: 4787546. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கிய 'இ - ஸ்ரம்' அடையாள எண்: 7120 9832 5405. இந்த இரு அடையாளங்களுமே அவரது மரணத்திற்கு நியாயம் செய்யவில்லை! சென்னை வேளச்சேரி - மேடவாக்கம் பிரதான சாலை பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டிருந்த என் 57 வயது கணவர், கடந்த மார்ச் 25ம் தேதி பள்ளிக்கரணை, பாரதிதாசன் 2வது தெரு பணியின் போது மண் சரிவில் சிக்கினார்!'உரிய பாதுகாப்புஉபகரணங்கள் வழங்காமலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமலும் பணி வழங்கிய மேற்பார்வையாளர், ஒப்பந்ததாரர் மீதான என் புகார் அடிப்படையில், 'டி14' பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை - 198/2025 பதிவாகியது! ஆனால், இன்று வரை ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை. போலீசார் முன்னிலையில் உறுதியளித்தபடி இழப்பீடும் வழங்கப்படவில்லை. என் கணவரின் மரணத்திற்கு உரிய நீதி வழங்குவாயா அரசே?