முதல்வரே ஒரு நிமிஷம்...
செய்தி: அரசு வீட்டின் தரமற்ற கட்டுமானத்தால் சுவர் இடிந்து சிறுமி பலி அநீதி: உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றாது ஒதுங்கி கொண்ட அரசு முதல்வரே... நான் சரண்யா. மயிலாடுதுறை, காளி பஞ்சாயத்து, பொய்கைகுடி கிராமத்தில் உள்ள அரசு தொகுப்பு வீட்டில் வசித்த எங்களுக்கு, 2024ல் பி.எம்.ஏ.ஒய்., திட்டத்தின் கீழ் வீடு கட்ட அனுமதி கிடைத்தது. கட்டுமான பணி நிறைவுறும் நிலையில், ஜூலை 23, 2025 மாலை 6:00 மணிக்கு வீட்டின் குறுக்கு சுவர் இடிந்து என் ஐந்து வயது மகள் சடலமாகி விட்டாள். மணல்மேடு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எண்: 180/2025) பதிவாக, நீதி கேட்டுப் போராடினோம். மயிலாடுதுறை எம்.எல்.ஏ., வட்டாட்சியர், மயிலாடுதுறை மற்றும் மணல்மேடு காவல் நிலைய ஆய்வாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில்... 'வீடு புனரமைத்து தரப்படும்; குழந்தையின் தாய்க்கு அரசு வேலை வழங்கப்படும்; முதல்வர் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்; ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனும் உறுதிமொழிகளோடு, மணல்மேடு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மயிலாடுதுறை வட்டாட்சியர் கையொப்பமிட்டு தந்த கடிதம் இன்னும் என் வசம் இருக்கிறது. ஆனால், முதல்வர் நிவாரணத்தொகை தவிர எதுவும் நிறைவேற வில்லை. 'முதல்வரின் முகவரி'க்கு அனுப்பிய மனுவுக்கும் (எண்:14734889) பலனில்லை. 'சொன்னதை மட்டுமல்ல... சொல்லா ததையும் நாங்கள் செய்திருக்கிறோம்' என பிரசாரங்களில் தாங்கள் முழங்குவதன் அர்த்தம் இதுதானா முதல்வரே?