நாங்க என்ன சொல்றோம்னா...: மர்தானி 3 (ஹிந்தி)
அடுத்தடுத்து அசராமல் தொடரும் அசுர வதம்இளம் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் அரக்கனை வீழ்த்தியது மர்தானி ; முற்போக்கு பெண்களை கொல்லும் சைக்கோவை அழித்தது மர்தானி 2 ; சிறுமிகளை கடத்தி பிச்சையெடுக்க வைக்கும் ராட்சசியை வேரோடு களைவது மர்தானி 3 . இம்மனித மிருகங்களை வேட்டையாடும் துர்கையாக ஷிவானி சிவாஜி ராய் ஐ.பி.எஸ்., 'ராட்சசியை ஷிவானி நெருங்குவதே திரைக்கதையின் தடம்' என்று 'டிரெய்லர்' சொல்வது போல், முதல் 45 நிமிடங்களில் ராட்சசியை ஷிவானியிடம் நெருங்க வைத்து, பின் அப்படியே கதையை தடம் மாற்றி இருக்கிறார் கதையாசிரியர் ஆயுஷ் குப்தா. இரண் டாம் பாதி துவங்கியதுமே நிகழும் ராட்சசியின் கைது, 'அதற்குள் க்ளைமாக்ஸா' என்று சுவாரஸ்யம் கூட்டுகிறது! 'திக் திக்' திரைக்கதையில், 'இது கறுப்பு ஆடு' என்று நாம் நம்பும்படியாக சுற்றிவரும் ஒரு பாத்திரம், நம்மை ஏமாற்ற முனையும் இடத்தில் முனை முறிந்த அம்பாக வீழ்வது மட்டும் சிரிப்பூட்டுகிறது; இப்படியான பாத்திரத்திற்கு தன் முழு திட்டத்தையும் வில்லன் விளக்கிச் சொல்வதான காட்சி... கந்தல்! பெரும்பாலான சமூக விரோதிகள் பெண்களை குறிவைத்து இயங்கும் மன நிலை விளக்கு கையில் ராணி முகர்ஜியின் ஆக்ரோஷம்... அற்புதம்! 'அம்மா'வாக ராட்சச குணம் காட்டும் மல்லிகா பிரசாத், தாலாட்டு பாடி சிறுமிகளை வஞ்சிக்கும் காட்சியில் மிரள வைக்கிறார். 'உழைக்கும் வர்க்கத்தினர் சமூக விரோதிகளால் இழப்பை எதிர் கொள்கையில் மெத்தனம் காட்டும் அரசு இயந்திரம், அதே இழப்பை அதிகார வர்க்கம் சந்திக்கும் போது 'ஜெட்' வேகத்தில் இயங்குகிறது' என்ற இயக்குனர் அபிராஜ் மினாவாலாவின் நியாயமான கோபத்திற்கு பாராட்டுகள். எதிர்பார்த்த திருப்பங்கள் எதிர்பாரா தருணத்தில் நிகழ்வதால், இறுதிவரை 'திக் திக்' தொடர்கிறது. ஆக...வில்லன் வீழ்கையில், 'சாவுடா...' என்கிறது மனது; படைப்புக்கு வெற்றி.