உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

'2கே' காதல் இப்படியானதா?பிரபுவுக்கும் ப்ரீத்திக்கும் திருமணம் பேசப்படுகிறது. பிரபுவோ நிலாவை காதலிக்கிறான். நிலாவோ அரவிந்தை திருமணம் செய்ய காத்திருக்கிறாள். பிரபுவின் நண்பன் ராஜேஷ், நண்பனின் காதலி ஸ்ரீயாவை காதலிக்கிறான். இதற்கிடையில், அஞ்சலி பிரபுவை காதலிக்கிறாள். இது ஒரு காதல் கதையாம்! 'பார்ட்டியும் போதையும் மட்டுமே '2கே' இளசுகளின் வாழ்க்கை' எனச் சொல்லும் திரைக்கதை, தப்பித்தவறி கூட யதார்த்தத்தை தீண்டவில்லை! நாயகி பெரும் பணக்காரி என்பதைச் சொல்ல அரண்மனை வீடும், கார்களும்; நண்பனுக்காக காதல் தியாகம்... கதைக்களம் 90களில் அமைந்திருந்தால் இதனை ரசித்திருக்கலாம்! கரையேறும் மீனவரிடம் இருந்து கருவாடுகளை வாங்கி வரும் அபத்தத்திற்கு இணையாய் காதலர்களின் பிரிவுக்கு இயக்குனர் சொல்லும் சப்பைக்கட்டு கதை; இழுஇழுவென வறட்டு இழு இழுத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ். இப்படைப்பு ஒரு குடிசை; இதன்மீது துண்டு பீடி வீசியவர்களின் வரிசையில் தனுஷுக்கு அடுத்தபடியாய் நாயகன் பவிஷ்; நாயகனின் நடனம் மட்டும் பவுசாய் ஈர்க்கிறது! பவிஷின் உடல்மொழியில் தனுஷ் வெளிப்படுவது, காட்சி அமைப்புகளில் தனுஷ் நடித்த படங்களின் சாயல் தெரிவது, உதடுகள் ஓய்ந்த பின்னும் வசனங்கள் ஒலித்துக் கொண்டிருப்பது, செயற்கைத்தனமான காட்சியமைப்புகள் எல்லாமும், 'அண்ணாசாலைக்கு வந்து பாரு...' வகையறாக்கள்! மூன்று வேளையும் கறிதோசை திகட்டிவிடாதா; அப்படித்தான் தனுஷ் குரலில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன பாடல்கள்! இரண்டாவது பாகம் இருக்கிறதாம்; ஆத்தாடி...ஆக...உயர்த்தி அழகு பார்க்கும் தமிழக ரசிகர்கள் மேல் தனுஷுக்கு என்ன கோபம்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !