நாங்க என்ன சொல்றோம்னா: தி மேத்தா பாய்ஸ் (ஹிந்தி)
'அன்பு தாமதமாகவே உணரப்படும்!'அழுத்தமாய் தான் தந்த ஒரு முத்தத்தால் அநாவசியமாய் தான் சுமந்து வந்த பாரத்தை இறக்கியதோடு, மேற்சொன்ன அறிவுரை தந்து க்ளைமாக்ஸில் விடைபெறும் பாசமிகு தந்தையாய் பொமன் இரானி! முத்தம் பெற்று சிலையாகி நிற்கும் மகனிடம், 'இந்த ஈரம் இனி உன் நினைவுகளில் அடிக்கடி வந்து உன்னை உறுத்துமேடா' என நம்மை பரிதாபப்பட வைக்கும் கலைநேர்த்தியுடன் பொமன் இரானியின் இயக்கம்!அக்கறையை கூட அறிவுரையாய் சொல்லும் அப்பா; அதனை தன் மீதான அக்கறையாய் புரிந்து கொள்ள இயலாத மகன்; 'தேன் கூடு' போல் துவங்கி 'தேள் கொடுக்கு' போல் நிறைவு பெறும் தந்தை - மகன் இடையிலான காட்சிகள் நம் வாழ்வை துல்லியமாய் சொல்லும் கண்ணாடிகள்! சடலம் காண்பிக்கப்படவில்லை; வெடித்து கதறும் ஓலங்கள் இல்லை; ஆனால், இறந்த பெண்ணானவள் மாண்புமிகு மனைவியாய், மதிப்புமிக்க தாயாய் வாழ்ந்திருக்கிறாள் என்பதை துக்க வீட்டின் உறுப்பினராய் நம்மால் உணர முடிகிறது. 'நான் இனி வாழப்போற முகவரியை உங்க அம்மாகிட்டே சொல்லு' என்று இல்லாதவளிடம் சொல்லச் சொல்லி மகளிடம் தந்தை ஆணையிடும் விதம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது... எம்மனதையும் உருக்கும் தகுதி பெற்றது! மனைவியை இழந்தபின் மகளோடு செல்ல வேண்டிய தந்தைக்கு, விரும்பா மகனோடு குறுகிய காலம் தங்கும் இறுதி வாய்ப்பை வழங்குகிறது விதி. அந்த விதி விளையாட்டில், தந்தையும் மகனும் தங்களது வண்ண வண்ண உணர்வு, உணர்ச்சிப் புள்ளிகளால் 'பாசம்' எனும் ரங்கோலி வரைந்திருக்கின்றனர். அந்த 'ரங்கோலி'க்கு பொமன் இரானியை காட்டிலும் அழுத்தி முத்தமிடத் தோன்றுகிறது.ஆக...வாழ்வின் கடைசி நிமிடத்தில் கிடக்கும் உறவின் விரல் பற்றுவது போல் விவரிக்க முடியா உணர்வு!