நாங்க என்ன சொல்றோம்னா...: விடாமுயற்சி
அஜித்குமார் தோண்டியிருக்கும் படுகுழி! கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் காதல் மனைவியை தொலைத்து கண்டுபிடிக்கும் முயற்சி... விடாமுயற்சியாம்!'எனக்கு பென்ஷன் வந்திருச்சும்மா' என மூத்த மகளிடம் சந்தோஷப்படும் பெரியவர் போல் பால்கனியில் த்ரிஷாவிடம் காதல் பகிர்கிறார் அஜித்; தாடி இல்லையென்றால் அஜித்குமாரை இனி ரசிக்க முடியாது போல!வெறி கொண்டு நெற்றிக்கு நேரே அர்ஜூன் துப்பாக்கி நீட்டுகையில், 'எங்க 'தல'யை சுடாம போனாலும் பரவாயில்ல... அவரோட கூலிங் கிளாஸை மட்டும் சுட்டு நொறுக்கிருங்க ஆக் ஷன் கிங்' என்று கதறத் தோன்றுகிறது. இடைவேளை வரை அக்கன்றாவியை கழற்றி கழற்றி மாட்டி வெகுவாய் வதைக்கிறார் 'கூலிங்கிளாஸ்' அஜித்!திரைக்கதையில், 'நீ முட்டாள்...' எனும் வார்த்தை அம்பு நாயகனை நோக்கி வீசப்படுகிறது; அஜர்பை ஜானின் ஆள் அரவமற்ற நீள சாலையில் அப்போதே அறிமுகமான ஆணுடன் மனைவியை வழி அனுப்பி வைப்பதில் துவங்கி, மனைவியின் சடலம் என ஏதோ ஒரு பெண் சடலத்தை கட்டி அழுது அரற்றுவது வரை பெரும்பாலான காட்சிகளில், 'என்னை நோக்கி வந்தது அம்பு அல்ல... உண்மை' என்று நிறுவுகிறார் நாயகன்! இடைவேளைக்குப் பின், 'ரசிகனின் உயிர் குடிக்கும் உற்சவம்' துவங்குகிறது. இப்படியான கொலை கொண்டாட்டத்தில் அனிருத்தின் இசை வழக்கம் போல் உருண்டு புரண்டு வீறிட... பின்னணியில் அஜித் கார் ஓட்டி புழுதி கிளப்ப... மயிர் கூச்செறியும் விதத்தில் ஒரு கிழவியின் நாக்கு தள்ள... நாம் பல்காட்டும் விதமாக மூன்று உயிர்களை பறித்து த்ரிஷாவை அஜித் மீட்க... பால் ஊற்றப்படுகிறது.ஆக...சீமானை எதிர்க்க அறியாத சிறுசின் சினம் போல சிரிப்பூட்டுகிறது விடாமுயற்சி.