சொந்த வீடு, வாடகை வீடு என்ற பேதமில்லாமல், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அனுமதிக்கும் செல்லப்பிராணிகளின் பட்டியலில், மீன்களுக்கு தான் முதலிடம். இவை தன் துடுப்பை அசைத்து கொண்டு, தண்ணீரில் நீந்தும் அழகை, ரசித்து கொண்டே இருக்கலாம். உங்கள் வீட்டிற்கு புதுவரவாக, இந்த ரக மீன்களையும் வாங்கலாம் என்கிறார், கோவை, அக்வாரியம் பாயின்ட் உரிமையாளர் சண்முக சுந்தரம். பேரட் பிஷ்
சிவப்பு, மஞ்சள், ஊதா, பச்சை என பல வண்ணங்களில் இருக்கும் பேரட் பிஷ், பெரிய தொட்டிகளில் விட்டு வளர்த்தால், ஜாலியாக நீந்து கொண்டே இருக்கும். இதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதால், மோட்டார் கட்டாயம் வைக்கணும். கிட்டத்தட்ட, 5-8 ஆண்டுகள் வரை வாழும், இந்த ரக மீன்கள், 6 இன்ஞ் வரை வளரும். இதற்கென ஸ்பெஷல் புட் கடைகளில் கிடைக்கின்றன. ஒரு சின்ன பேரட் பிஷ் விலை, கிட்டத்தட்ட 300 ரூபாய். ஆஸ்கர் பிஷ்
திரைத்துறை விருதுகளில், ஆஸ்கருக்கு எந்தளவுக்கு மவுசு இருக்கிறதோ அதேபோல, இந்த வெரைட்டி மீனுக்கு, ரசிகர் பட்டாளம் ஏராளம். கிட்டத்தட்ட, 12-15 இஞ்ச் வரை வளரும். இதன் டேங்கில், அக்வாரியம் செடிகள் வைக்கக்கூடாது. சிறியதாக இருக்கும் போதே, பிற வெரைட்டி மீன்களுடன் சேர்த்து வளர்க்கலாம். சற்று வளர்ந்த மீனாக வாங்கினால், தனியாக டேங்கில் வளர்ப்பதே சிறந்தது. பிளாக் மூஸ்
இதை, கோல்டு , ஏஞ்சல், ஷார்க், டெட்ரா வெரைட்டி மீன்களோடு சேர்த்து வளர்க்கலாம். ஒரு பெரிய சைஸ் தொட்டியில், இம்மீன்களை சேர்த்து நீந்தவிட்டு, லைட் செட் அப் அமைத்தால், பார்க்கவே அழகாக இருக்கும். இத்தொட்டியில், மோட்டார் கட்டாயம் வைக்கணும். ஒரு சிறிய பிளாக் மூஸ் மீன் விலை வெறும் 15 ரூபாய் தான் என்பதால், டஜன் கணக்கில் வாங்கி, தொட்டியில் நீந்தவிடலாம். மில்க் ஒயிட் கொய் கார்ப்
கொய் கார்ப் வெரைட்டியில், பல்வேறு நிறங்களில், மீன்கள் இருந்தாலும், வெண்மை நிற மீனுக்கு மவுசு அதிகம். இதை, வீட்டிற்குள் குளம் போன்ற அமைப்பை உருவாக்கி வளர்க்கலாம். டேங்கில் வளர்ப்பதாக இருந்தால், மோட்டார் கட்டாயம் வைக்கணும். கிட்டத்தட்ட 2 அடி நீளம் வரை வளருவதோடு, நன்றாக பராமரித்தால், 10 ஆண்டுகள் வரை சுறுசுறுப்பாக நீந்தி கொண்டே இருக்கும்.