உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / வலியால் துடிக்கும் ஜீவன்களை வாரி அணைக்கும் உள்ளங்கள்

வலியால் துடிக்கும் ஜீவன்களை வாரி அணைக்கும் உள்ளங்கள்

கல்லுாரியில் படிக்கும் போது, ரோட்டில் அடிபட்டுக்கிடந்த தெருநாயை மீட்டு சிகிச்சை அளித்தோம். இதை தெரிந்த நண்பருக்கு தத்து கொடுத்த போது மனநிறைவு ஏற்பட்டது. இதற்கு பின், எங்கு தெருநாய்கள் அடிப்பட்டாலும், நண்பர் நவீத்துடன் இணைந்து, களத்தில் இறங்கிவிடுவோம். சிகிச்சைக்கு பின், அதே இடத்தில் விட்டுவிடுவோம்.கடந்த 2020 ல், மதுரை, கோச்சடையில் வாத நோயால் ஒரு தெருநாய் துடிதுடித்தது. வார்த்தையால் சொல்ல முடியாத ரணங்களோடும், காயங்களோடும் கிடந்த அத்தெருநாயை, கையால் வாரி அணைத்து, மருத்துவமனை நோக்கி ஓடினோம். இதை வேடிக்கை பார்த்தவர்களுள், நல்லுள்ளம் கொண்ட ராஜேஷ் என்பவர், அவரின் நிலத்தை இச்சேவை பணிகளுக்கு, குத்தகைக்கு கொடுத்தார். இப்படி உருவானது தான் 'சேப் ஹோம் பவுண்டேஷன்' என்கிறார், அதன் நிர்வாகி சாருஹாசன்.

இதன் பணிகள் என்ன?

தெருநாய்களுக்கு சிகிச்சை மையம் உருவாக்கியுள்ளோம். 3 முழு நேர டாக்டர்களுடன் மொத்தம் 11 பேர் பணிப்புரிகின்றனர். சிகிச்சை காலம் வரை, தங்க வைத்து உணவு கொடுக்கிறோம். கருத்தடை செய்து, அதன் இடத்திலே கொண்டு போய் விட்டுவிடுவோம். வயதான, உடல் ஊனமுற்ற நாய்களை நாங்களே இறுதிவரை பார்த்துக் கொள்கிறோம். தற்போது, 120 நாய்கள் இங்கு இருக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளில்,4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட, தெருநாய்களை மீட்டுள்ளோம். இங்கு கொண்டு வரப்படும் நாய்களுக்கு, அளிக்கப்படும் சிகிச்சை, கருத்தடை, தடுப்பூசி செலுத்திய விவரங்களை, 'மைக்ரோ சிப்'பில் பதிவேற்றப்பட்டு, அவைகளின் உடலில் செலுத்திவிடுவோம். வீட்டு நாய்களுக்கும் குறைந்த கட்டணத்தில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எதிர்கால திட்டம் என்ன?

இந்தியாவிலேயே நாய்கடியால் பாதிக்கப்படுவோர், தமிழகத்தில் தான் அதிகம் உள்ளனர். இதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, விலங்கு நல வாரியத்தின் அனுமதியுடன், 'ரேபிஸ் இல்லா மண்டலம்' என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, விரைவில் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.மதுரையில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை குறித்து, சர்வே எடுத்து வருகிறோம். மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியோடு, ரேபிஸ்க்கான தடுப்பூசி போடுதல், இலவசமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும். வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களுக்கான பிசியோதெரபி, நீரில் நடக்க வைப்பதற்கான குளம், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் கருவிகளுடன், அதிநவீன சிகிச்சை மையம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.இப்பணிகளுக்கு, மாதந்தோறும் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. மக்கள் ஆதரவில்லாமல் எதுவும் நடக்காது. கொஞ்சம் அன்பும், கருணையும் காட்டினால், தெருநாய்களின் வாழ்நாளை நீட்டிக்கலாம். இவர்களுக்கு உதவ 80722 67161


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை