அரவணாவின் ஆலிங்கனம்!
சின்னதும் பெரியதுமாய், வானில் சிமிட்டிக் கொண்டே இருக்கும் விண்மீன்களை போல, அக்குவாரியம் மீன்களிலும், எக்கச்சக்க வெரைட்டி இனப்பெருக்கம் செய்து விற்கப்படுகிறது. இதில், வாஸ்து மீனாக கருத்தப்படும், அரவணா வகை குறித்து, சென்னை, திருவெற்றியூரில் உள்ள, ராயல் அக்குவாரிய உரிமையாளர் ரஞ்சித்குமார் நம்மிடம் பகிர்ந்தவை: பிளவர்ஹார்ன் தவிர, மற்ற அரவணா வகை மீன்களை, இந்தியாவில் ப்ரீடிங் (இனப்பெருக்கம்) செய்வதில்லை. இவை, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள, நன்னீர் ஏரிகளில் உற்பத்தியாவதால், அங்கிருந்து தான், இறக்குமதி செய்து விற்கப்படுகிறது. சீனா, கம்போடியா, வியட்நாம் நாட்டினர், அரவணா வகை மீன்களை வாஸ்துக்காக வளர்க்கின்றனர். இங்கும், தற்போது சிலர் இதை பின்பற்றுகின்றனர். அரவணா வகை மீன்களின் அளவு, விலையை பொறுத்து, 'பேசிக்', 'பிரீமியம்', 'எக்ஸாடிக்' என மூன்று வகையாக பிரித்து விற்கப்படுகிறது. இதில், பிரீமியம் வகை மீன்களை இறக்குமதி செய்து விற்கிறேன். பேசிக் வெரைட்டியில், சில்வர், ஆல்பினோ சில்வர், கிரீன், பஞ்ஜாரா, கோல்டன் பேர்ள் வாங்கலாம். இதன் விலை, 3 ஆயிரத்தில் இருந்து, 60,000 ரூபாய் வரை, அக்குவாரியம் கடைகளில் விற்கப்படுகிறது. பிரீமியம் வெரைட்டியில், ப்ளூ பேஸ் கிராஸ்பேக், 24 கே கிராஸ்பேக், சூப்பர் ரெட் வகை, ஒன்றரை லட்சம் ரூபாய் முதல் விற்கப்படுகிறது. இதன் நிறம், மினுமினுப்பு தன்மை மாறவே மாறாது. எக்ஸாடிக் வெரைட்டியில், பட்டர்பிளை ப்ளூ பேஸ் அரவணாவுக்கு, தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவ்வகை மீன்களுக்கு வால் இருக்காது. அதன் துடுப்புகள் இதய வடிவில் இணைந்து காணப்படும். இது, தண்ணீரில் நீந்தும் நளினத்திற்கே, சில லட்சங்களை கொடுத்து, மக்கள் வாங்குகின்றனர். ஒரு மீன் வளர, குறைந்தபட்சம் 4 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் உயரம் கொண்ட டேங்க் இருப்பது அவசியம். இதன் வளர்ச்சியை பொறுத்து, உணவின் அளவு மாறுபடும். அதீத உணவு கொடுக்கக்கூடாது. செரிமான பிரச்னை ஏற்பட்டால், மீன்கள் வாந்தி எடுக்கும். இதுதவிர, வயிற்றுக்குள் அதிகளவு தண்ணீர், காற்று இருந்தாலும், மீன்கள் சாப்பிடாமல் அடம்பிடிக்கும். இச்சமயங்களில், குடல்புழு நீக்க மருந்து கொடுத்தால், அவை பழைய நிலைக்கு திரும்பி, சுறுசுறுப்பாக நீந்தும். இவை, 10-15 ஆண்டுகள் உயிர்வாழும். வீட்டிலுள்ளோர் டேங்க் அருகில் வந்தாலே, அவர்களையும் தம்முடன் நீந்த அழைப்பது போல, துடுப்பை அசைக்கும்.