'அடிப்பட்டு ஆதரவில்லாமல் துடிக்கும் தெருநாய்களை, மருத்துவமனைக்கு ஏற்றி செல்ல, எந்நேரமும் அழைக்கலாம்' என்ற வாசகத்தோட, தொலைபேசி எண்ணையும், கூகுளில் இணைத்துள்ளார், சென்னை, ஆட்டோ டிரைவர் பாஸ்கர். இவரின் சேவைகளை பாராட்டி, சோசியல் மீடியாவில் பலரும் பகிர்ந்ததை தொடர்ந்து அவரை தொடர்பு கொண்டோம்...இந்த சேவையில் ஈடுபட்டது எப்படி?
நான் வாடகை வீட்டில் வசிப்பதால் செல்லப்பிராணிகள் வளர்க்க அனுமதியில்லை. தெருநாய்களை பார்த்தால், அவற்றின் பசியாற்றுவேன். அடிபட்டு கிடந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வேன். தெருநாய்களை பார்த்து இரக்கப்படுவோர் வெகுசிலரே. அதன் வலியை உணர்ந்து, யாராவது அழைத்தால் எந்த இக்கட்டான சூழலாக இருந்தாலும், டிரைவர் சீட்டில் அமர்ந்துவிடுவேன்.என் பணியை பின்தொடர்ந்து, நிறையபேர் தெருநாய்களை ஆதரிக்க வந்துவிட்டனர். இதனால், தற்போது இறந்து போன செல்லப்பிராணிகளுக்கு இறுதி சடங்கு செய்கிறேன். கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும், 250 நாய்களை அடக்கம் செய்திருக்கிறேன்.சென்னை, வேளச்சேரியில் தெருநாய்களுக்கான மின்மயானம் இருக்கிறது. கண்ணம்மாபேட்டையில், பிரத்யேக இடத்தில் புதைக்க அனுமதிக்கின்றனர். திருவான்மியூர், மயிலாப்பூரிலும், செல்லப்பிராணிகளின் இறுதி சடங்குகளுக்கு அனுமதி உண்டு. எந்த ஜீவனாக இருந்தாலும், இறந்த பிறகு, ஈ மொய்த்து, புழு வைத்து, அழுகும்நிலைக்கு செல்லக்கூடாது. இதிலும், வாழும் வரை, ஆதரவில்லாமல் சுற்றி திரியும் தெருநாய்கள் இறந்த பிறகாவது, ஆத்மா சாந்தியடைய செய்ய வேண்டும்.இறந்த தெருநாய்களை எடுத்து செல்லும் போது, அப்பகுதி மக்கள் தங்களால் இயன்றதை தருகிறார்கள். பல நேரங்களில், கைகாசு கரையும். ஆத்மதிருப்தியோடு செய்யும் காரியங்களுக்கு, வரவு செலவு கணக்கு பார்க்க முடியுமா.உங்களின் எதிர்பார்ப்பு..
தெருநாய்கள் பசியோடு இருந்தால் உணவளியுங்கள். உங்களால் முடிந்தால், அடிப்பட்டு இருந்தால் மருத்துவ உதவி, இறந்து கிடந்தால் இறுதி அஞ்சலிக்கு உதவுங்கள். இங்கு வாழ்வதற்கு உரிமை இருப்பது போல, கவுரவமாக இறப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள். சென்னையின் தெருக்களில், தெருநாய்கள் இறந்து கிடந்தாலோ, இறுதி காரியங்கள் செய்யவோ, 70107 65506 எண்ணிற்கு எந்நேரமும் அழைக்கலாம்.