மேலும் செய்திகள்
கதைபேசும் கலைப்பொருட்கள் சொல்கிறார் 'ஜீவா'
08-Mar-2025
''ஆசையாக வளர்த்த செல்லப்பிராணியை திடீரென ஒருநாள் தொலைத்துவிட்டால், அதை தேடி கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. எங்கே பார்த்தாலும் அந்த ஜீவனின் முகம் தான் கண் முன் நிற்கும். உண்ணாமல், உறங்காமல், எங்கே தேடுவது என தெரியாமல் திணறுவோருக்காகவே, 'லாஸ்ட் பெட்ஸ் ஆப் சென்னை' பக்கத்தை துவக்கினோம்,'' என்கிறார், அதன் நிறுவனர் ஷர்மிளா.இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
மூன்று ஆண்டுகளுக்கு முன் பசியோடு எங்கு செல்வதென தெரியாமல், தெருவில் சுற்றி கொண்டிருந்த, ஒரு லேப்ரடார் பப்பியை, 'ப்ளூ கிராஸ்' தன்னார்வ அமைப்பில் ஒப்படைத்தேன். அடுத்தநாளே அதன் உரிமையாளர், போனில் தொடர்பு கொண்டு, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அந்த நொடியில் வந்த சிந்தனை தான், 'லாஸ்ட் பெட்ஸ் ஆப் சென்னை' (Lost pets of chennai) என்ற பக்கத்தை துவங்க அடித்தளமாக இருந்தது.நான், தற்போது மீடியா சயின்ஸ் துறையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்கிறேன். இதனால், களத்திற்கு நேரில் சென்று, பப்பியை மீட்பது, உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாது. இதனால், இன்ஸ்டாகிராமில், ஒரு பக்கம் துவங்கி, காணாமல் போனதாக தகவல் அளிக்கும் பப்பியின் புகைப்படம், அடையாளங்கள், நிறம், உரிமையாளரின் தொடர்பு எண் குறிப்பிட்டு பதிவிடுவேன்.இதை, செல்லப்பிராணிகளுக்கான தன்னார்வ பணிகளில் ஈடுபடும், பிற சமூக வலைதள பக்கங்களுக்கும் 'டேக்' செய்வேன். சம்பந்தப்பட்ட உரிமையாளரின் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்புகளுக்கு, இத்தகவலை பகிர்ந்து, தேவையான உதவிகள் கிடைக்க வழிவகை செய்வேன்.இதோடு, செல்லப்பிராணி தொலைந்துவிட்டால், உடனே தகவலை சமூக வலைதளங்களில் பகிர்தல், நோட்டீஸ் அடித்தல், காவல் நிலையத்தில் புகார் அளித்தல், தேடுதல் வேட்டையில் ஈடுபடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். பப்பி கிடைத்ததும், மறக்காமல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பர். அதையும் உடனே குழுக்களில் பகிர்வதால், இப்பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், சென்னையை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட, தொலைந்து போன பப்பி, மியாவ் உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் தகவல்களை பதிவேற்றி இருக்கிறோம். இதில், 45 சதவீத செல்லப்பிராணிகள், மீண்டும் உரிமையாளரிடம் வந்து சேர்ந்துவிட்டன.வெளிநாட்டு இன நாய்கள், தெருக்களிலோ, சாலைகளிலோ சுற்றி கொண்டிருந்தால், எளிதில் அடையாளம் காண முடிகிறது. ஆனால், நாட்டு நாய், தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் பட்சத்தில், அவை தொலைந்துவிட்டால், அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இவைகளின் கழுத்தில், காலர் அணிவித்தல், நாயின் பெயர், உரிமையாளரின் தொடர்பு எண் அடங்கிய டாலர் தயாரித்து அணிவித்தால், தொலைந்தாலும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.விரைவில், இப்பக்கத்திற்கு பிரத்யேக இணையதளம் உருவாக்கி, செல்லப்பிராணி தொலைந்தால் எளிதில் கண்டறியும் வகையில், சில தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
08-Mar-2025