உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / செய்திகள் / கிராமத்து மனையில் வழிபாதை தொடர்பாக எழும் பிரச்னைகள் என்ன?

கிராமத்து மனையில் வழிபாதை தொடர்பாக எழும் பிரச்னைகள் என்ன?

நகரங்களில், புறநகர் பகுதிகளில் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கும் போது, அது முறையான லேஅவுட்டில் சாலை வசதிகளுடன் இருக்கும். ஆனால், கிராமங்களில், வீடு கட்டுவதற்கு என்று அரை அல்லது ஒரு கிரவுண்ட் நிலத்தை வாங்கும் போது பாதை தொடர்பான விபரங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். இன்றைக்கும் பெரும்பாலான மக்கள் கிராமங்களில் நிலம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நகரங்களை விட விலை குறைவு என்பதுடன், சொந்த ஊரில் தங்களுக்கு ஒரு சொத்து இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களால் மக்கள் நிலம் வாங்குவதில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கிராமங்களில் நகர், ஊரமைப்பு சட்டப்படி முறையான அங்கீகாரம் இன்றி நிலம் பல்வேறு பாகங்களாக பிரிக்கப்படுகிறது. இவ்வாறு நிலத்தை பங்கு பிரித்து விற்பவர்கள் பெரும்பாலும் உறவினர்களாக தான் இருப்பர் என்பதால், பாதை விடுவது போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக, ஒரு நிலம் பல்வேறு பாகங்களாக பிரிக்கப்படும் நிலையில், ஒவ்வொரு பாகத்துக்கும் முறையான பாதை இருக்க வேண்டும். இப்படி, பாதைக்கான நிலத்தை ஒதுக்கி, அதை ஒவ்வொருவருக்குமான பத்திரத்திலும் குறிப்பிட வேண்டியது அவசியம். ஆனால், பல இடங்களில் பாதைகளுக்கான நிலம் ஆவண ரீதியாக ஒதுக்காமல் பெயரளவில் அனைவரும் ஒப்புக்கொண்டது என்று விடுகின்றனர். இவ்வாறு, பாதையாக பயன்படுத்த விடப்பட்ட நிலம் பொதுவாகாமல், யாராவது ஒரு தனி நபரின் பெயரில் பத்திரத்தில் இடம் பெற்று இருக்கும். இவ்வாறு, பாகம் பிரித்து நிலம் பங்கிடப்படும் நிலையில் இருப்பவர்கள் வாழ்நாள் வரை எவ்வித பிரச்னையும் வருவதில்லை. ஆனால், இதில் முன்னின்று பங்கு பிரித்தவர், பாதைக்கான நிலத்தை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதித்தவர் இறந்த நிலையில், அவரது வாரிசுகள் அந்த நிலத்தை பயன்படுத்த விட மறுக்கும் நிலை ஏற்படும். உதாரணமாக, ஒருவரின் பெயரில் இருந்த நிலம், மகன்களால் பங்கிடப்பட்டு இருக்கும். இதில் பிரதான சாலையை ஒட்டிய பாகத்தை பெற்ற நபர், குடும்பத்தின் மூத்தவராக இருந்து, அதன் வழியே பின்னால் உள்ள மற்ற வாரிசுகள் தங்கள் நிலத்துக்குசெல்ல அனுமதித்து இருப்பார். இதில் மற்றவர்கள் பயன்படுத்தும் பகுதி, முதலாமவர் பெயரிலேயே தொடர்ந்து இருந்து வரும் நிலையில், அவரது அடுத்த தலைமுறை வாரிசுகள் இதை ஏற்க மறுக்கலாம். இதனால், மூத்த வாரிசு இறந்த நிலையில் பொது பாதை இன்றி பின்னால் உள்ள பாக மனைகளை பெற்றவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, கிராமங்களில் நிலம் வாங்கும் போது, பொது பாதை குறித்த விபரங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆவணத்தில் பாதைக்கான இடம் பொதுவானது என்று குறிப்பிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை