எடை குறைந்த செங்கல் ஒதுக்க வேண்டியவையா?
செங்கலின் தரமும், உறுதியும் மிக முக்கியம். சமீபகாலமாக புதிய வகை செங்கல்கள் கட்டுமான துறையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இவற்றில் செங்கலுக்குள் வெற்றிடத்துடன் தயாரிக்கப்படுவதை காணலாம். இவற்றை பயன்படுத்தினால் கட்டடம் அப்படியே உட்கார்ந்துவிடுமோ என்று பதறக்கூடும். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ். அவர் கூறியதாவது: இந்த வகையான செங்கல் வெப்பத்தை எளிதில் ஈர்ப்பதில்லை. கோடைகாலத்தில் ஏ.சி., பயன்பாட்டை குறைக்க முடியும். குளிர்காலத்தின் மின்சார பயன்பாடும் குறையும். 1,000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்படுவதால், தீப்பற்றிக்கொள்வதில்லை. செங்கலில் உள்ள துளைகள் கோடையில் ஓரளவு குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பையும் கொடுக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் விளங்குகின்றன. விலை குறைவானது. களிமண், கரிப்பொடி, உமி, கிாரனைட் உள்ளிட்டவை கொண்டு உருவாகுவதால், ஒவ்வாமை ஏற்படுவதில்லை. இந்த 'போரோதெர்ம்' செங்கல் வழக்கமான செங்கலின் எடையில், 60 சதவீதம் எடை கொண்டதாக மட்டுமே இருக்கிறது. அஸ்திவாரத்திற்கு பயன்படுத்த முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.