உள்ளூர் செய்திகள்

13 ஜனவரி 2015 - ஒரு டாக்டரின் டைரி குறிப்பு

லட்சுமிக்கு வயது, 47. கணவர், இரண்டு பிள்ளைகள் என, அழகான குடும்பம். சந்தோஷமாக சென்ற அவரது வாழ்வில், விதி வலியது என்பதை நிரூபித்தது. காரணம், அவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்கியது. நோய் பற்றி அவர் அறிந்தபோது, அதன் தீவிரம் அதிகமாகி முற்றி விட்டது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 1.30 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் சரிபாதிப் பேர் தான், புற்றுநோய்க்கான போரில் வெற்றி பெறுகின்றனர். ஆனால், இது தவிர்க்கக்கூடிய நோய்தான். தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதி, பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில், வாய் போன்ற அமைப்பு உள்ளது. அதில், 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' என்ற கிருமியால், புற்றுநோய் ஏற்படுகிறது.பொதுவாக, வைரஸ் கிருமி தாக்குதலின்போது, பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே, அதை எதிர்த்து வெற்றி கொள்கிறது. சில பெண்களுக்கு இந்தக் கிருமி, சில காலத்திற்கு உடலுக்குள்ளேயே அமைதியாக இருந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காலத்தில், தாக்குதல் நடத்துகிறது.இந்த நிலையில், இயல்பான செல்களில் மாற்றம் ஏற்படுகிறது. மாற்றம் அடைந்த இந்த செல்கள், அதிவேகத்தில் பெருக்கம் அடைகின்றன. இவை இறப்பதும் இல்லை. இவ்வாறு தான், கர்ப்பப்பை வாய் புற்று பரவுகிறது.புற்றுநோய் தாக்கத்தை அறிந்து, லட்சுமியின் குடும்பமே, சோகத்தில் ஆழ்ந்தது. அவர்களின் சந்தோஷ வாழ்க்கை என்னாகுமோ என்ற பரிதவிப்பில், நாட்கள் சென்றன. காஞ்சிபுரத்தில் உள்ள, எங்கள் மருத்துவமனைக்கு, லட்சுமி வந்திருந்தார். அவருக்கு, கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் குணமாகாத லட்சுமி, நோயின் தீவிரத்தில் உருக்குலைந்து போனார்.அவரின் நிலை கண்டு, உண்ணக்கூட பிடிக்காமல், கவலையிலேயே குடும்பத்தார் காலம் தள்ளினர். லட்சுமியின் நோயை குணப்படுத்த, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் அவர் குணமாகிவிட்டார். ஆனால், விதி அப்போதும் விளையாட ஆரம்பித்தது.தமிழகமே அச்சத்தில் மூழ்கிய நேரம் அது. கடந்த மாதம், ௧௩ம் தேதி அன்று தான், முதன்முதலில் காஞ்சிபுரத்தில், மழை ௬௦௦ மி.மீ., பதிவாகியது. அன்று, லட்சுமிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் போடப்பட்ட தையல் பிரிந்து, குடல் வெளியே வந்துவிட்டது. அப்போது நான் தான், மருத்துவமனையில் லட்சுமியை கவனித்தேன். அப்போது அந்தக் குடும்பம் சிந்திய கண்ணீர், என் மனதை தைத்தது. இயற்கையை மாற்ற முடியாது. அது ஏற்படுத்தும் பாதிப்பையும் நம்மால் தடுக்க முடியாது. ஆனால், ஒரு மருத்துவராக, ஓர் உயிரை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. எனவே, லட்சுமியை மீண்டும் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்று, குடலை உள்ளே தள்ளி, தையல் பிரிந்த இடத்தை மீண்டும் தைத்து, குணமாக்கினோம்.லட்சுமி குணமடைந்ததும், அவரது குடும்பம் எனக்கு கண்ணீரோடு நன்றி சொன்னதை, என் வாழ்நாளில் மறக்க முடியாது.- ஜெ.ஜெயக்குமார்,புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்.பேராசிரியர் தலைவர், அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, காஞ்சிபுரம்.98402 56144


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !