27 மார்ச் 2011: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
உன் பிஞ்சுக் கால்கள்/ நோகாமல் என் நெஞ்சிலே தடம் பதித்து/ கொஞ்சி நடை பழகு/ உன் தீராத குறும்பால்/ என் ஆறாத காயங்களும்/ ஆறிப் போய்விடும் - என்ற கவிதை வரிகளை, ஒரு வார இதழில் படித்துக் கொண்டிருந்த, வள்ளியின் கண்களில் தானாக, கண்ணீர் பெருக்கெடுத்தது.வள்ளியின் கணவர் பிரதீப், தீயணைப்புத் துறையில் முக்கிய பணியில் இருக்கிறார். அவர்களின், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு தான் ப்ரியன். ப்ரியன், கருவில் இருந்தபோதே, தம்பதி, குழந்தையை பற்றி கனவு காண ஆரம்பித்து விட்டனர். ஆனால் ப்ரியன் பிறக்கும் போதே, பிரச்னையோடு, பிறந்தான். அவனுக்கு மருத்துவ மொழியில், 'க்ளப் புட்' எனப்படும் பிரச்னை இருந்தது. அதாவது இரண்டும் பாதங்களும் உள்நோக்கி வளைந்திருந்தன. தன் பிள்ளையால், மற்ற பிள்ளைகளை போல, ஓடி ஆட முடியாதே என, பெற்றோர் கவலையுற்றனர். அவர்களின், சொந்த ஊர் நாகர்கோவில் என்பதால், அங்கிருந்த எலும்பு நிபுணரை அணுகியிருக்கின்றனர். அவர், பி.ஓ.பி., எனப்படும் மாவுக் கட்டு, வாரத்திற்கு ஒன்று வீதம், இரண்டு மாதங்களுக்கு போட்டிருக்கிறார். இதில் ப்ரியனின் பாதங்கள் புண்ணாகிவிட்டன; புண் ஆறவே இல்லை. இதனால் கவலையுற்ற பிரதீப் தம்பதி, உறவினர்கள் யாரிடமும் சொல்லாமல், அறுவை சிகிச்சை செய்ய நினைத்து, சென்னை வந்தனர். பின், என்னை பற்றி, அறிந்து என்னிடம் வந்தனர். முதலில், ப்ரியனின் பிரச்னை தீர்க்க கூடியதே, என்று பெற்றோருக்கு சொல்லி புரிய வைப்பதே, எனக்கு, சவாலாக இருந்தது. 90 சதவீதம் குழந்தைகள் இப்படி பிறக்க, காரணங்களே, இல்லை. பல ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டில், குழந்தைகளின் பாதங்கள், வளைந்திருந்தால், அதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது. ஆனால், தற்போது மாற்று வழியாக, மாவுக் கட்டு போட்டே, வளைந்த பாதங்களை சரி செய்ய முடியும். இந்த சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர், பான்சிட்டி எனும் வெளிநாட்டு, பிரபல மருத்துவர். நான் வெளிநாட்டில் இருந்த போது, இந்த சிகிச்சை முறையை, அவரிடம் நேரடியாக கற்றுக் கொண்டேன். தற்போது, கர்ப்ப காலத்தின் போதே, 'ஸ்கேன்' பரிசோதனையின் மூலம், குழந்தையின் கால்கள் வளைந்திருக்கின்றன என்று, மருத்துவர்கள் தெரியப்படுத்தி விடுகின்றனர். உடனே, பெற்றோரும் கருத்தரித்ததை நினைத்து சந்தோஷப்படாமல், கவலை கொள்ள ஆரம்பித்து, மன உளைச்சலுக்கு ஆளாகி பல பிரச்னைகளை, எதிர் கொள்கின்றனர். இதனால், என்னிடம் சிகிச்சை பெற்ற ஒரு குழந்தையின் பெற்றோர், 'வாட்ஸ் ஆப்'பில் ஒரு குழுவை உருவாக்கி, பாதிக்கப்படும் பெற்றோரிடம், எடுத்துரைக்கின்றனர்.தற்போது, 'க்ளப் புட்'டிற்கு சிகிச்சையாக, வாரத்திற்கு ஒருமுறை மாவுக் கட்டு என, ஐந்து முறை போடப்படும். ஐந்தாவது கட்டின் போது, குதிகால் நரம்பினை கீறிவிட்டு, கட்டு போடப்படும் கடைசி கட்டை பிரிக்க, இரண்டு வாரங்கள் ஆகும். அதன் பின், குழந்தைக்கு வளைந்திருந்த, பாதங்கள் நேராகி விடும். பின், நாங்கள் கொடுக்கும் காலணிகளை, குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு, இரவு நேரங்களில் அணிவிக்க வேண்டும். ப்ரியனுக்கும் இதுபோன்றே சிகிச்சை செய்யப்பட்டது. ப்ரியனும், இனி மற்ற குழந்தைகளை போல, ஓடி, ஆடி, விளையாடலாம்.- ஆர்.சங்கர், குழந்தைகள் நல எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்.அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை, கிரீம்ஸ் சாலை, சென்னை.99625 82525