காற்றின் மூலம் பரவும் உயிர்க்கொல்லி கிருமி!
புளூ, டெங்கு உட்பட பலவிதமான தொற்று நோய்கள் பற்றி ஆண்டு முழுதும் பேசுகிறோம். இவற்றை விடவும் சவாலாக இருப்பது, டி.பி., எனப்படும் காச நோய்.புள்ளி விபரங்களை பார்த்தால், மற்ற தொற்று நோய்களால் இறப்பவர்களைக் காட்டிலும், காச நோய் பாதிப்பால் இறப்பவர்களே அதிகம். இன்று வரை நம் நாட்டின் நிலைமை இதுதான்.மற்ற தொற்றுக்களால் பாதித்த நபர் இருமும் போதுதும்மும் போது வெளிப்படும் நீர்த் திவலை பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து 6 அடி துாரத்திற்குள் இருந்தால் தான் நம்மைத் தொற்றும். காற்று மூலம் பரவும் பாக்டீரியாத் தொற்றான டி.பி., குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அனைவரையும் பாதிக்கும்.உதாரணமாக, 'ஏசி' ஹாலில் இருக்கும் 100 பேரில் ஒருவருக்கு டி.பி., பாதிப்பு இருந்தால், அவரிடம் இருந்து கிருமி காற்றில் பரவி, அந்த அறையில் இருக்கும் 100 பேரின் உடலுக்குள்ளும் டி.பி., கிருமி செல்லும். மற்ற தொற்றுகள் நம்மை தாக்காமல் இருக்க முககவசம் அணியலாம்.ஆனால், பாதிப்பு இருப்பவர் முககவசம் அணிந்தால் மட்டுமே டி.பி., கிருமி வெளியில் வராமல் இருக்கும்.டி.பி., பாதிப்பு இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. என்னிடம் வந்த நோயாளி ஒருவருக்கு மூன்று மாதங்களாக சளி, இருமல் இருந்திருக்கிறது; பல டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றும் சளி, இருமல் குறையாததால் என்னிடம் வந்தார்.'எக்ஸ் ரே' எடுத்தேன். மாற்றம் தெரிந்தது. சளி பரிசோதனையில் டி.பி., பாதிப்பு அதிகம் இருப்பதை உறுதி செய்யும் '3 பிளஸ்' என்று முடிவு வந்தது. 'மைனஸ்' என்றால், டி.பி., பாக்டீரியா இல்லை. 1 பிளஸ், மிதமான பாதிப்பு; 2 பிளஸ் அதிகம். இவர் ஐ.டி., ஊழியர். வேலை செய்யும் இடத்தில், வீட்டில் என்று பலரும் இவரிடமிருந்து டி.பி., கிருமியை பெற்றிருக்கலாம். கிருமி உடம்பிற்குள் நுழைந்ததும் அறிகுறிகள் வெளிப்படாது; அமைதியாக காத்திருக்கும். எப்போது எதிர்ப்பு சக்தி குறைகிறதோ அப்போது அறிகுறிகளாக வெளிப்படும்.டி.பி., பாதிப்பை தாமதமாக கண்டறிவது பொதுவான விஷயமாக உள்ளது.இரண்டு வாரத்திற்கு மேல் சளி, இருமல், மாலை வேளையில் காய்ச்சல், பசியின்மை, காரணம் இல்லாமல் எடை குறைவது, சோர்வு, இரவு நேரங்களில் வியர்வை இதன் அறிகுறிகள்.டி.பி., பரிசோதனை செய்யலாம் என்று டாக்டர் சொன்னால், சாதாரண சளி என்று வந்தேன். இவர் என்ன பெரிய வியாதி சொல்லி பயமுறுத்துகிறார் என்று டாக்டரை மாற்றி விடுகின்றனர். இதனாலேயே டாக்டர்களும் சொல்ல தயங்குகின்றனர்.டி.பி.,க்கு இலவச சிகிச்சையை அரசு தருகிறது. இருந்தும், டி.பி., பற்றிய அறியாமை அதிகம். எலும்புருக்கி நோய் என்று சொல்லப்படும் இது அபாயகரமான நோய்.டி.பி., என்றதும், என் பரம்பரையிலேயே இது கிடையாது டாக்டர் என்று தான் சொல்வர்.பெண் குழந்தைக்கு டி.பி., வந்தால், சிகிச்சை பற்றியோ, நோய் பற்றியோ கேட்பதை விடவும், கல்யாணம் ஆகுமா, குழந்தை பிறக்குமா என்று தான் கேட்பர்.நுரையீரலை மட்டும் தான் டி.பி., பாதிக்கும் என்பதில்லை. அக்குள், கழுத்தில் நெறி கட்டுவது, சிலருக்கு நுரையீரல், மண்ணீரலின் பக்கத்தில், வயிற்றின் உள்ளேயும் நெறி கட்டும். குடல், மூளை, முதுகெலும்பு, கண்கள் என்று எந்த உறுப்பிலும் டி.பி., வரலாம்.எந்த இடத்தில் டி.பி., பாதிக்கிறதோ அதற்கேற்பவே அறிகுறிகள் இருக்கும்.நுரையீரலில் வந்தால் இருமல், சளி; மூளையை பாதித்தால் தலைவலி; கழுத்தில் நெறி கட்டினால் வீக்கம், வலி இருக்கும். வயிற்றில் இருந்தால் உடல் எடை குறையும்; செரிமானம் ஆகாது.இடுப்பெலும்பு, கால் மூட்டுகள் என்று எந்த எலும்பு பகுதியில் இருந்தாலும் வலி இருக்கும்.கொரோனா தொற்றுக்கு பின் டி.பி., பாதிப்பு அதிகம் உள்ளது. காரணம், சளி, இருமல் என்றவுடன் சி.டி., ஸ்கேன் பரிசோதனை செய்வதால் பாதிப்பு வெளியில் தெரிகிறது. எந்த உடல் பிரச்னையானாலும் 15 நாட்களுக்குள் சரியாகாமல், நாளுக்கு நாள் அதிகமானால் டி..பி., இருக்கலாம் என்று சந்தேகப்பட வேண்டும்.உடனே கூகுளில் சென்று தேடி, நாமாகவே பரிசோதனை செய்து, ரிசல்ட் எடுத்து வந்து டாக்டரிடம் காட்டக்கூடாது.நோயாளியை, டாக்டர் நேரடியாக பரிசோதித்த பின், அதை உறுதிசெய்வதற்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்.டாக்டர் பி.செந்துார் நம்பி,தொற்று நோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை044 - 2829 3333, 044 - 2829 6784drsendhurnambi_p@apollohospitals.com