சுவரில் கற்பிக்கும் பாடம்
குழந்தைகளின் படிநிலையான வளர்ச்சியில், பெற்றோரை காட்டிலும், தாத்தா, பாட்டிகளின் பங்கு அதிகம் உள்ளது. தாத்தாவுடன் வாக்கிங் செல்வது, பாட்டியுடன் பேசுவது என, பெரும்பாலான நேரம் இவர்களுடன் செலவிடுவதையே குழந்தைகளும் விரும்புவர். ஆனால், தற்போதைய நவீன காலத்தில், தாத்தா, பாட்டிகளை, ஸ்கைப், வீடியோ கால் மூலம் தான் பார்க்க முடிகிறது.காரணம், பொருளாதார தேடலுக்காக, சொந்த ஊரை விட்டு வேறு இடத்துக்கு வேலைக்கு செல்வது தான். இதனால், குழந்தைகள், தாத்தா, பாட்டியுடன் சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்நேரங்களில், குழந்தைகள் வீட்டில் தனிமையை உணருவது போல் இருப்பார்கள். இவர்களுக்காக...வீட்டின் சுவர்களில், கலர்புல் ஓவியங்கள், அ, ஆ, இ, ஈ., ஏ,பி.சி,டி., நாட்டின் தலைவர்கள் படம், விலங்குகள், பறவைகள் படம் என வீட்டின் சுவர்களில் ஒட்டிவிடுங்கள். இதை பார்க்கும்போதெல்லாம், குழந்தைகள், மனம் உள்வாங்கிக் கொள்வர். இதன்மூலம், குழந்தைகளுக்கு எழுத்துக்கள், விலங்குகளின் முகங்கள் எளிதில் மனதில் பதிய ஆரம்பித்துவிடும். தவிர, நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், சுவரில் ஒட்டியுள்ள ஓவியங்கள், எழுத்துக்களை காண்பித்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.எந்த ஒரு பெற்றோருக்கும், நம் குழந்தை அறிவாளியாகவும், திறமையானவராகவும் வளரும் போது மகிழ்ச்சியாக இருக்கும். இதற்கு, இதுபோன்ற செயல்களை குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுத்தர வேண்டும். அப்போது, தன்னை சுற்றிலும், ஏதோ ஒரு விஷயம் இருப்பதை அவர்களின் மூளை ஏற்றுக் கொள்கிறது. இதனால், தனிமை என்ற உணர்வு அழிக்கப்பட்டு, தன்னம்பிக்கை வளரும். தவிர, நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரங்களையும் கற்றுக்கொடுத்து வளர்க்கும் போது, சமுதாயத்தில் தனியொரு ஆளாக நின்று எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை பிறக்கும். அனைத்து பொறுப்பும் பெற்றோரிடம் உள்ளது.