உடல் வெப்பத்தை அதிகரிக்கும் காரம்!
உடல் தன்னைத் தானே குளிர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியாதபோது சோர்வு, தலைசுற்றல், குமட்டல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். அப்போது, வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெப்பத்தால் ஏற்படும் சோர்வு, வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.வெயில் கொளுத்தும் நாட்களில் காலை 10:00 - மாலை 4:00 மணி வரை, வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது. உடலின் மீது காற்று படும்படியான வெளிர் நிற, உடலை இறுக்காத ஆடைகளை அணிய வேண்டும்.வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிழல் உள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். காபி, டீயைத் தவிர்த்து, அதிக அளவில் தண்ணீர் குடிக்கும்போது நம் உடலில் வறட்சி ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.வெயில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, 'எஸ்பிஎப்' கொண்ட 'சன் ஸ்கிரீன் லோஷனை' பயன்படுத்தினால், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.விட்டமின்கள், தாதுக்கள் அதிகமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிடும்போது, வறட்சி இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தர்ப்பூசணி, திராட்சை போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும், வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளையும் சாப்பிடலாம். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தயிரில் அதிகம் உள்ளது. செரிமானத்தை மேம்படுத்த தயிர் சாப்பிடலாம்.வறுத்த உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், ஜீரணிப்பது சிரமம். இதனால், உடல் மந்தமாகவும், சோர்வாகவும் இருக்கும். காரமான உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரித்து, வியர்வையை உண்டாக்கும்; உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.பாக்கெட்டுகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் சர்க்கரை, உப்பு அதிகமாக இருப்பதால், அவையும் உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.தாகம் எடுக்காவிட்டாலும், நாள் முழுதும் தண்ணீர் குடிப்பது அவசியம். வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல மறக்கக் கூடாது. சோடா போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை, உடலின் நீர்ச்சத்தை குறைத்து வறட்சியை ஏற்படுத்தும்.சூரிய ஒளியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, வெளியில் செல்லும் நேரத்தில் தொப்பி மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க, 'சன் கிளாஸ்' அணியலாம்.சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க, பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.டாக்டர் அஸ்வின் கருப்பன், உள மருத்துவ ஆலோசகர், சென்னை