உள்ளூர் செய்திகள்

ஆயுர்வேதம்: எலும்புத் தாதுவின் குறை

நான்கு வயதுள்ள குழந்தை ரவிக்கு, இரண்டு வயதிலிருந்து ஆயுர்வேத சிகிச்சை துவங்கியது. இரண்டு ஆண்டுகளாக அவனுக்கு, மார்பில் அடிக்கடி சளிக்கட்டி, மூச்சுத்திணறல் ஏற்படும். குழந்தையின் தந்தைக்குச் சிறு வயதிலிருந்து ஆஸ்துமா நோய் உண்டு. தாய் வீட்டாருக்கும் மூச்சு சம்பந்தப்பட்ட நோய் உள்ளதால், அக்குழந்தைக்கு இந்த நோய் ஒரு பரம்பரை சொத்து.அத்துடன் அவனுக்கு, வேறு சில பிரச்னைகளும் இருந்தன. அவனுடைய முழங்கை, முழங்கால் பகுதிகளில் தோல் வெடித்து சிவந்து, அரிப்பை உண்டு பண்ணும். மேலும், ரவியின் உடம்பு எப்போதும், காய்ச்சல் அடிப்பது போல், சூடாகவே இருக்கும்; வேர்வை சிறிதளவு கூட இருக்காது.

உடல் வெப்பம் தாங்காமல், 'ஏசி' அறை, கார் இவைகளைத் தான் விரும்புவான். அவனுடைய மூச்சுப் பிரச்னைக்காக முதலில் ஆயுர்வேத சிகிச்சையை நாடினான். அது, அவனுடைய நோயைக் கட்டுப்படுத்த நன்றாக வேலை செய்தது.ரவிக்கு நான்கு வயது ஆகியும், பற்கள் முளைக்கவில்லை. பள்ளியில் சிறுவர்கள் அவனை கேலி செய்ய ஆரம்பித்தனர். பல் டாக்டரிடம் ரவியை அழைத்து சென்று பெற்றோர் காண்பிக்க, அவர் பல் ஈறுகளில் படம் எடுத்துப் பார்த்து விட்டு, 'இவனுக்கு, 'எக்டோ டெர்மல் டிஸ்பிளாசியா' எனும் மரபு வழி வரும் வியாதி. இதனால், இவனுக்கு பல் முளைக்காது' எனக் கூறினார்.

பிறகு பெற்றோர், ஆயுர்வேத வைத்தியரிடம் அழைத்து வந்தனர். ஆயுர்வேத மருத்துவத்தில் பல், ஒரு எலும்பு என்று கணக்கிடப்படுகிறது. எனவே, பற்கள் இல்லையென்றால், எலும்பு தாதுவின் குறைவு என்பதை உணர வேண்டும். இந்த வியாதிக்கு, எலு ம்பு தாதுவின் குறையை நிவர்த்தி செய்யும் சிகிச்சை மேற்கொண்டால், ஒருவேளை பற்கள் தோன்றலாம் என்ற கணிப்பில், சிகிச்சை துவங்கியது. அக்குழந்தைக்கு உட்கொள்ள நெய் மருந்துகள், எண்ணெய் குளியல், எலும்புத் தாதுவின் குறையை நிவர்த்தி செய்யும் வஸ்தி சிகிச்சை, அதாவது, ஆசனவாய் வழியாகக் கொடுக்கப்படும் மருந்து மற்றும் உட்கொள்ள, பிஞ்சு எலும்பினால் சமைக்கப்பட்ட சூப் என்ற எல்லா சிகிச்சைகளும், முறைப்படி கையாளப்பட்டது. சிகிச்சை முடிந்தவுடன், பெற்றோரின் மனதில் ஒரு பெரிய கேள்விக்குறி. குழந்தைக்கு எத்தனை நாட்களில், பல் முளைக்க வாய்ப்புண்டு என்பதே. அதற்கு டாக்டர், ஆறு மாத காலம் வரை காத்திருக்குமாறு கூறினார்.

ஆனால், சிகிச்சை முடிந்த இரண்டு வாரத்திற்குள், இரண்டு பற்கள் தோன்றின. ஒரு மாதத்திற்கு பிறகு, மற்றொரு பல் தோன்றியது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, மீண்டும் பெற்றோர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டனர்.அப்போதும் சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு பல் தோன்றியது.இதுபோன்று, பல புதுப்புது வியாதிகள் மக்களைத் தாக்கலாம். ஆயுர்வேத முறைப்படி, அதன் காரணங்களை சரிவர ஆராய்ந்து சிகிச்சை அளித்தால், எந்த ஒரு வியாதிக்கும் உகந்த தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- டாக்டர் பி.எல்.டி. கிரிஜா, சஞ்சீவனி, ஆயுர்வேத யோகா மையம். sanjeevanifoundation@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்