உருளைக்கிழங்கில் உயிர் சத்து
ஊட்டி, கொடைக்கானல் உட்பட மலை வாசஸ்தலங்களில் வசிப்பவர்களின் முக்கிய உணவுப் பொருள், உருளைக்கிழங்கு என்றால் மிகையாகாது. இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களும், உருளைக்கிழங்கை வாங்கி வருவதில் ஆர்வம் காட்டுவர்.உலகெங்கும் மிகுதியாக உருளைக்கிழங்கைப் பயன்படுத்துகின்றனர். தானியங்களுக்கு அடுத்த நிலையில், அதிகளவில் மக்கள் உண்ணுகின்றனர். இதை, தினமும் உண்பவர்களும் உள்ளனர். இது, உயிர் சத்துக்களை வழங்கும் முக்கிய உணவாக இருக்கின்றது. மக்கள், உருளைக்கிழங்கை முக்கிய உணவாகக் கருதுவதற்குச் சில காரணங்களைக் கூறலாம். முதலாவதாக, இதில் எளிதாகச் செரிக்கக் கூடிய மாவுப் பொருள் இருக்கின்றது. வாழைப்பழத்துக்கு அடுத்தப்படியாக மிக எளிதாக செரிக்கக் கூடிய மாவுப் பொருள் இது. ஆதலால், ஜீரண உறுப்புக்கள் வலுவற்று இருப்பவர்கள் கூட உருளைக்கிழங்கை உண்ணலாம்.இதில் பலவகையான தாது உப்புக்கள் உள்ளன. தானியங்களைப் போல் இல்லாமல், உருளைக்கிழங்கில் எளிதாகக் கரையக்கூடிய காரப்பொருட்களும் உள்ளன. உருளைக்கிழங்கில் நான்கில் மூன்று பாகம் நீர்ச்சத்தும், ஒரு பாகம் சத்துப் பொருட்களும் உள்ளன. அதாவது, 20 சதவீதம் கார்போஹைட்ரேட், 2 சதவீதம் புரதச்சத்து, ஒரு சதவீதம் சாம்பல் சத்து, 77 சதவீதம் நீர்ச்சத்து அடங்கியுள்ளன. மேலும், சிறந்த புரதச் சத்துக்களும், சி உயிர்ச்சத்தும் காணப்படுகிறது.பொதுவாக, உருளைக்கிழங்கு குறைந்த விலையில் கிடைக்கிறது. தோலை உரிக்காமல் வேக வைக்கும் போது தான், அதிலிருக்கும் உயிர் சத்துக்களையும், தாதுப்பொருட்களையும்- பாதுகாக்க முடியும். அதன் தோலில் தான் பொட்டாசியம் சிலிகான், சோடியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன.சத்தான உப்புப் பொருட்கள் தோலுக்கடியில் இருப்பதால், கவனமாக அதை உரிக்க வேண்டும். பச்சை உருளைக்கிழங்கு தோலில் பி சி உயிர் சத்துக்கள் உள்ளன. இவை, எளிதாக தண்ணீரில் கரையக் கூடியவை. உருளைக் கிழங்கை வேக வைத்த தண்ணீரில் இந்தச் சத்துக்கள் சேர்ந்து விடுகின்றன. ஆதலால், அதை கொட்டி விடாமல், குடிக்கக் கூடிய சாறாக மாற்றிக் குடிப்பது நல்லது.உருளைக்கிழங்கு உடலைத் தடிக்கச் செய்யும். கனத்த உடம்பினருக்கு இது ஏற்றதல்ல. வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வாத உடம்புடையவர்கள், மூல நோயாளிகள், வயதானவர்கள், மார்பு வலியுடையவர்கள் ஆகியோர், இதை ஒதுக்குவது நல்லது. உருளைக்கிழங்கில் இத்தனை பயன்கள் இருக்கிறதா? என்று புரிந்திருந்தால், குறிப்பிட்ட அளவு எடுக்க மறக்காதீங்க.