உள்ளூர் செய்திகள்

பாட்டிலில் அடைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி!

தேவை ஏற்படும் போது மட்டும், உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வது முடியாது. 'நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், வைரசிடம் இருந்து தப்பிக்கலாம்' என்றதும், 'இன்ஸ்டென்'டாக, விட்டமின் சி, 'ஜிங்க்' மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். இது எப்படி இருக்கிறது என்றால், கல்யாணம் நிச்சயம் ஆனவுடன், அழகாக வேண்டும் என்று நினைப்பதை போல!

சூரிய நமஸ்காரம்

வாழ்க்கை முழுதும், தினசரி வாழ்க்கையில் ஒழுங்கு முறையை கடைப்பிடித்தால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி, பளபளப்பான தலைமுடி, தோல், 'பிட்னெஸ்' என்று, நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் சாத்தியம். தற்போது, உலகம் முழுதும் பேசப்படும் தலைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி!கால்சியம், விட்ட மின் சி, ஜிங்க் மாத்திரை பாட்டில்களுக்குள், 'ஆப்'புக்குள், 'வாட்ஸ் ஆப்'பில் வரும் தகவல்களில், நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது, அதன் தயாரிப்பாளர்களின் வர்த்தக வளர்ச்சிக்கு மட்டுமே உதவும்.சரியான நேரத்தில் துாங்கி, சரியான நேரத்தில் விழித்து, அலுவலகம் சென்றாலும், இல்லாவிட்டாலும், தினசரி ஒழுங்கு முறையை கடைப்பிடிப்பது. தினமும் சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை, 30 நிமிடங்கள் செய்வது.வெளியிடங்களில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து, வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்பது போன்ற எளிமையான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் மட்டுமே, தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, தினை, பனி வரகு, கோதுமை, அரிசி, நெய், வேம்பு, நெல்லிக்காய், எலுமிச்சை, மஞ்சள், சீரகம்.இஞ்சி, மிளகு, வெற்றிலை, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் என, நம் பாரம்பரிய உணவில், எத்தனையோ வகைகள் உள்ளன.

பாரம்பரிய உணவு

இவற்றை வைத்து, விதவிதமாக, நுாற்றுக்கணக்கான வகைகளை வீட்டிலேயே சமைக்கலாம். இவற்றில் இருந்து கிடைக்காத சத்துக்களே கிடையாது. அசைவம் சாப்பிடுபவர்கள், தங்கள் குடும்ப வழக்கப்படி, பாட்டி, தாத்தா எப்படி சமைத்து சாப்பிட்டன ரோ, அதே முறையில் சமைத்து சாப்பிடுங்கள். காய்கறிகள், தானியங்கள் இவற்றோடு சேர்த்து, மாமிசத்தையும் சாப்பிடுவர். அதை விடுத்து, வெறும் மாமிசத்தை மட்டும், அதிக அளவில் சாப்பிட வேண்டாம்.இத்தனை தானியங்களையும், பருப்புகளையும் தாண்டி, நமக்கு சம்பந்தமே இல்லாத உணவுகளை, ஏன் சாப்பிட வேண்டும்?இனிமேலாவது, நம் பாரம்பரிய உணவுகள், மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம் என்று, வாழ்க்கையை மாற்றிக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே வளரும். சாப்பிடும் உணவிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மற்ற அனைத்தையும் விட முழுமையான தொடர்பு உள்ளது.ருஜூதா திவேகர், நியூட்ரிஷனிஸ்ட், மும்பை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !