உள்ளூர் செய்திகள்

"இருதய மாத்திரைகளால் அல்சர் வருமா

சடாச்சரம், மதுரை: எனது வயது 77. ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில் இருதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது தெரிந்தது. இரு அடைப்புகளை உடனடியாக நீக்கி, ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளேன். மற்றொரு அடைப்பை நீக்க, 3 மாதங்கள் ஆகும் என டாக்டர் கூறுகிறார். அதை மருந்தால் கரைக்க முடியுமா?இருதய ரத்தநாள அடைப்புக்கு 3 வகை சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து மாத்திரை, பலூன் மற்றும் ஸ்டென்ட் வைப்பது, பைபாஸ் சர்ஜரி ஆகியவையே அவை. பலூன் சிகிச்சையில் அடைப்பை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது. பைபாஸ் சர்ஜரி சிகிச்சையில், அடைப்பை தாண்டி புதிய ரத்தநாளத்தை ஆப்பரேஷன் மூலம் பொருத்துகின்றனர்.இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில், பலூன் மற்றும் ஸ்டென்ட், பைபாஸ் சர்ஜரி எந்தளவு வளர்ந்துள்ளதோ, அந்தளவு மருந்து மாத்திரை சிகிச்சையும் வளர்ந்துள்ளது என்பது உண்மையே. இருந்தாலும், மருந்தால் அடைப்பை அதிகரிக்காமலும், வராமலும் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இருக்கும் அடைப்பை கரைக்க முடியாது.சிறிய ரத்தநாள அடைப்புகள், தீவிரம் இல்லாத அடைப்புகளுக்கு மருந்து மாத்திரையே போதும். ஆகவே உணவுக் கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி, சர்க்கரை அளவு, ரத்தஅழுத்த அளவை கட்டுப்பாட்டில் வைப்பது, மருந்தை வேளை தவறாமல் எடுப்பது, மனதை நிம்மதியாக வைப்பது மூலம், இதுபோன்ற அடைப்புகளுக்கு கவலைப்படத் தேவையில்லை.எஸ். ஆறுமுகம், சிவகங்கை: எனக்கு 4 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்கு அம்லோடிபின் 5 மி.கி., மாத்திரையை எடுத்து வருகிறேன். தற்போது ரத்தஅழுத்தம் 150/100 என்ற அளவில் உள்ளது. நான் என்ன செய்வது?உயர்ரத்த அழுத்தத்திற்கு வாழ்வியல் முறை மாற்றமே முதல் சிகிச்சை. உணவில் உப்பு, எண்ணெ#யை குறைப்பது, மனதை நிம்மதியாக வைப்பது, தினசரி உடற்பயிற்சி போன்றவை முக்கியமானவை. இவை அனைத்தும் செய்தபின்னும் ரத்தஅழுத்தம் குறையவில்லை எனில், மாத்திரையை எடுக்க வேண்டும். அம்லோடிபின் மாத்திரை எடுத்த பின்னும் 150/100 என்ற அளவில் ரத்தஅழுத்தம் இருந்தால், மற்றொரு மாத்திரையை எடுக்க வேண்டி வரும். ஒருவருக்கு எந்த வயதிலும், எந்தத் தருணத்திலும் ரத்தஅழுத்தம் 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். இதற்கு தற்போது பக்கவிளைவில்லாத நல்ல மருந்துகள் உள்ளன.சி. பாலமுருகன், சிவகாசி: நான் 9 ஆண்டுகளாக இருதய நோய்க்கு 6 வகை மாத்திரைகளை எடுத்து வருகிறேன். இதனால அல்சர் வர வாய்ப்பு உள்ளதா?இருதய சிகிச்சையில் உள்ள பல மருந்துகளுக்கு அல்சர் அல்லது வாயு தொல்லை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆஸ்பிரின் மாத்திரைக்கு அதிகம் உள்ளது. பக்க விளைவை தடுக்க, மாற்று மருந்து பெற உங்கள் டாக்டரை கலந்து ஆலோசிப்பது நல்லது.பி.விஜயகுமார், உத்தமபாளையம்: எனக்கு ஆறு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது சர்க்கரை அளவு அடிக்கடி 70 மி.கி., என்ற அளவில் குறைகிறது. நான் என்ன செய்வது?சர்க்கரை நோய் உள்ள இருதய நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறையக் கூடாது. அளவு குறைந்தால் அது பல்வேறு வழிகளில் இருதயத்தை பாதிக்கக் கூடும். இருதய நோய் உள்ளவர்கள், முதியோர் போன்றவர்களுக்கு சர்க்கரை அளவு, வெறும் வயிற்றில் 130 மி.கி.,யும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 180 மி.கி., என்ற அளவிலும் இருப்பது சிறந்தது. HbA1c அளவு 7.0 என்ற அளவில் இருந்தால் போதுமானது. நீங்கள் டாக்டரை அணுகி, மாத்திரை அளவை, நன்கு குறைத்தாக வேண்டும்.- டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை. 0452-437 0703


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்