"ஆஸ்துமா பாதிப்புடன் பல்சிகிச்சை செய்யலாமா
எனக்கு பல ஆண்டுகளாக ஆஸ்துமா உள்ளது. சிலவகை உணவு மற்றும் மருந்துகளுக்கு அலர்ஜியும் உள்ளது. எனக்கு கடந்த சில வாரங்களாக பல்வலி இருக்கிறது. நான் பல் சிகிச்சை செய்து கொள்ளலாமா?ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நம் நாட்டில் மிகச்சாதாரணமாக காணப்படுகிறது. மற்ற எந்த நோயையும் போல, இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் தாராளமாக பல் சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சிகிச்சை செய்யும்போது, சில பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தினமும் ஆஸ்துமா மாத்திரையை சாப்பிடுபவரானால், பல் சிகிச்சை நாளன்று காலையில் மறக்காமல் மாத்திரையை சாப்பிட வேண்டும். மதிய நேரங்களில் தங்கள் சிகிச்சை நேரம் அமைவது நல்லது. பல் சிகிச்சை செய்து கொள்ள பயம் உள்ளவர்கள், அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தால், ஆஸ்துமா, இருமல், இளைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வப்போது இடைவெளி விட்டு, வலி இல்லாமல் குறைந்த நேரத்தில் சிகிச்சையை செய்து முடிக்க வேண்டும். நீண்ட நேரம் படுத்தவாக்கில் வைத்து சிகிச்சை செய்யக் கூடாது. இதையும் தாண்டி இருமல் அல்லது இளைப்பு ஏற்பட்டால் உடனடியாக கொடுப்பதற்கு மருந்துகள் கைவசம் வேண்டும். இது போன்ற வழிமுறைகளை நீங்களும், மருத்துவரும் பின்பற்றினால் பயமின்றி சிகிச்சை செய்து கொள்ளலாம்.எனக்கு முன்பற்கள் கோணலாக உள்ளது. பல்வரிசையும் சீராக இல்லை. இதற்கு கம்பிபோட்டு சரிசெய்ய வேண்டும் என டாக்டர் கூறுகிறார். பற்களில் கம்பி போடும்போது, பார்ப்பதற்கு வாயில் உலோகம் தெரிவது போன்ற தோற்றம் இருப்பது, எனக்கு பிடிக்கவில்லை. இதற்கு வேறு வழி ஏதாவது உள்ளதா?பற்களில் கம்பி போடும்போது உலோகம் தெரிவதை பலர் விரும்புவதில்லை. குறிப்பாக வேலை நிமித்தமாக பலரை சந்தித்து பேசுபவர்களுக்கு இந்த தோற்றம் சில நேரங்களில் சங்கடம் அளிக்கும். இன்றைய நவீன சிகிச்சை முறையில் இதற்கு தீர்வுகள் கண்டிப்பாக உண்டு. கம்பி போடுவதற்காக பற்களில் பொருத்தப்படும் பிராக்கெட் என்பவை உலோகத்தால் ஆனது. இப்போது அவை செராமிக்கிலும் கிடைக்கிறது.இவற்றை பற்களில் பொருத்தும்போது, பற்களுக்கும் இவற்றிற்கும் வித்தியாசமே இல்லாமல் இருக்கும். இதனால் உலோகம் தெரிவது போன்ற தோற்றம் இருக்காது. இதற்கு மற்றொரு தீர்வு இந்த உலோகத்தால் ஆன பிராக்கெட்டுகளை பற்களின் உட்புறம் பொருத்தலாம். இதற்கு 'லிங்குவல் ஆர்த்தோடான்டிக்ஸ்' என்று பெயர். இந்த முறையிலும் வெளிப்பார்வைக்கு உலோகம் தெரியாமல் இருக்கும். சிகிச்சை காலத்திலும் சுத்தம் செய்யும் முறையிலும் வித்தியாசம் எதுவும் கிடையாது. உங்களுக்கு தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்து அழகான பல்வரிசையை பெறலாம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,மதுரை. 94441-54551