உள்ளூர் செய்திகள்

குளிர்ச்சியாக்கும் இளநீர்

உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இளநீர். இளநீரில், தாதுப் பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு, செம்பு, கந்தகம், மெக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. இளங்காய்களில், நீர். ஈரப்பதம், புரதம், கொழுப்பு மாவுப்பொருள், சாம்பல் ஆகிய சத்துக்களும் உள்ளன. ஒரு இளநீரில், 17.4 கலோரி சத்து உள்ளன.இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் ரத்த நாளங்களில் உஷ்ண ஆதிக்கம் அடையாமல் இருக்க உதவுகிறது. மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்தபேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் ரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றுக்கு, இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது, டாக்டரிடம் செல்வதற்கு முன், இரண்டு குவளை இளநீர் அருந்துவது நல்லது. வெயில் காலங்களில், வியர்வை ஏராளமாக வெளியேறுவதால், சிறுநீர், குறைவாக வெளியேறும். அப்போது, ஒரு இளநீர் குடித்தால், ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் கடுப்பு நின்றுவிடும். பேதி, சீதபேதி, ரத்த பேதிஆகும்போது, மற்ற உணவுகளை தவிர்த்து விட்டு, உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.உடலுக்கு ஊக்கம் தரும்: இளநீர், மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இளநீர் நன்கு முற்றி காய்ந்தவுடன் அதிலிருந்து தேங்காய் எடுக்கப்படுகிறது. காலை உணவுக்கு பின், இளநீர் சாப்பிடுவது, ஆரோக்கியத்துக்கு மிகமிக நல்லது. இது உடலுக்கு ஊக்கத்தையும், சக்தியையும் அளிக்கும். தோல் பளபளப்பாக மாற, தினமும் இளநீர் குடித்தால் பலன் உண்டு. இதிலுள்ள சல்பர் உப்பு, ரத்தம் சுத்தம் அடையவும், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன், தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன.இளமை தரும் பானம்: இளநீர், இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். இளநீர் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது. காரணம், 100 கிராம் இளநீரில், 312 மி.கி., பொட்டாசியமும், 30 மி.கி., மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும், தசைகளுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டி விடுகின்றன. இதனால் தான் இளநீர் அருந்தியதும், நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது.மஞ்சள் காமாலையை தடுக்கும்: இளநீரில் உள்ள சர்க்கரையை, உடல் உடனடியாகக் கிரகித்துக் கொள்கிறது. பாக்டீரியாக்கள் இல்லாத நோய் நுண்ம நச்சுக்கள் ஒழிக்கப்பட்ட இந்தத் தண்ணீர் பாதுகாப்பானது. சிறுநீரில், கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது. தசைப்பகுதியில் அதிகமாக சுண்ணாம்புச்சத்து தங்கிவிடாமல் தடுக்கவும், சோடியம் உப்பு மிகவும் உதவும். இந்த சோடியம் உப்பு, இளநீரில் நன்கு உள்ளது.இத்துடன் மூளையும் நரம்பு மண்டலமும், கோளாறு இல்லாமல் இயங்கவும் உடலுக்கு முக்கியமாக உதவும் தாது உப்பான பாஸ்பரஸ், 37 மில்லி கிராமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமினும், இளநீரில் கிடைப்பதால், சத்து மிக்க பானமாக கருதப்படுகிறது. வெயில் காலங்களில் மட்டுமல்லாது, அனைத்து காலங்களிலும், இளநீரை பருகி வந்தால், அதிகப்படியான சூடு, உடலில் தங்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !