உள்ளூர் செய்திகள்

நீரிழிவு நோயாளிகளின் கால்களுக்கு பாதகமாகும் பாத புண்

நீரிழிவு நோய்க்கு ஆளாவோர், முறையான மருத்துவ சிகிச்சை மூலம், இந்நோயை கட்டுப்படுத்த தவறினால், நாளடைவில், அவர்களின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. இவற்றுடன், நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் ஏற்படும் சிறு புண்களால் கூட, அவர்களின் கால் வழியாக செல்லும் நரம்புகள் மற்றும் ரத்த குழாய்கள் சேதமடைந்து, அவர்கள், தங்கள் காலை இழக்கும் அபாயம் உள்ளது. இந்நிலைக்கு ஆளாகும் போக்கும். நீரிழிவு நோயாளிகள் மத்தியில், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகள், கால்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படுவது ஏன், இந்நிலைக்கு ஆளாகாமல் இருப்பது எப்படி என்பது குறித்து, மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள்: நீரிழிவு நோயாளிகள், வெறும் காலில் நடக்கும் போது, அவர்கள் காலில், சிறு கல், கண்ணாடி துண்டுகள் போன்றவை குத்த நேர்ந்தால், அவற்றால், சிறு காயம் ஏற்பட்டு, கால் வழியாக செல்லும் நரம்புகள் மற்றும் ரத்த குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இந்நோயாளிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால், அவர்களின் பாதத்தில் ஏற்பட்ட புண் ஆறுவதில்லை. ஆறாத புண், இறுதியில் தொற்றாக மாறி, முழங்காலை, அறுவை சிகிச்சை செய்து, வெட்டி எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.இந்த அவலநிலையை தவிர்க்க, நீரிழிவு நோயாளிகள், உறங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும், கட்டாயம் காலணி அணிந்து தான் நடக்க வேண்டும். தினமும், முகம் பார்ப்பது போல், தங்கள் பாதங்களையும், கண்ணாடியில் தவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது, பாதங்களில் வெடிப்போ, காயமோ தெரிந்தால், காலம் தாழ்த்தாமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.குறைந்தபட்சம், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, தங்கள் கால் நரம்புகளின் உணர்வு, ரத்த ஓட்டம் ஆகியவை குறித்த பரிசோதனைகளை, தவறாமல் செய்து கொள்ள வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், நீரிழிவு நோயாளிகள், தங்கள் பாதங்களை பராமரித்து, கால்களுக்கு பாதகம் உண்டாவதை தவிர்க்கலாம்.எதிர்பாராமல் நிகழ்வதால், சாலை விபத்துகளில் கால்களை இழப்பவர், அந்த இழப்பிற்கு முழு பொறுப்பாளி ஆக மாட்டார். ஆனால், நீரிழிவு நோயால், ஒருவர் தன் கால்களை இழக்கிறார் என்றால், அதற்கு அவரின் அலட்சிய போக்கு மட்டுமே காரணமாக இருக்க முடியும். இதை கருத்தில் கொண்டு செயல்படுவதே, நீரிழிவு நோயாளிகளுக்கும், அவரை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்