டாக்டரின் டைரி
டிச., 1 2016: பிரசன்னா ஒரு மெகானிக்கல் இன்ஜினியர். இன்னும் திருமணமாகவில்லை. தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்ததால் பெண்கள் மீது அளவிட முடியாத மதிப்புண்டு. இதனால் தனக்கு வரும் மனைவியை மிகவும் அன்பாகவும் மரியாதையோடும் நடத்த வேண்டும் என்று மனதுக்குள் கனவுகளை வைத்திருந்தார். திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அவருக்கு தன் பிரச்னை தெரிய வந்தது. என்னை சந்திக்க தன் தாயோடு வந்தார்.அவரது பிரச்னை 25 வயதிலேயே பற்கள் முழுவதும் எலும்புகளின் பிடிமானத்திலிருந்து கொட்ட ஆரம்பித்து விட்டது. என்னை சந்தித்தபோது தீவிரமான பிரச்னைதான் என்றேன். ஆனால், தீர்க்கக்கூடியதே என்று தெரிந்ததும்தான் பிரசன்னா நிம்மதி பெரு மூச்சுவிட்டார்.பாப்பிலன் லேபேப்ரி. இதை நோய் என்று கூட சொல்ல முடியாது. மரபியல் ரீதியாக, 'கதப்சின் சி' எனும், குரோமோசோம் குறைபாட்டினால் வரும் பாதிப்பு! எல்லா குழந்தைகளுக்கும் 6, 7 வயதில், பால் பற்கள் விழத் தொடங்கும். ஆனால், பாப்பிலன் லேபேப்ரி பாதிப்பு இருப்பவர்களுக்கு, சீக்கிரமாகவே பால் பற்கள் விழுந்துவிட வாய்ப்புண்டு!பால்பற்கள் விழுந்த பிறகு, நிரந்தர பற்கள் முளைக்கும். ஆனால், இவையும் பதினேழு, பதினெட்டு வயதிலேயே ஆட ஆரம்பித்துவிடும். முப்பது வயதிற்குள்ளாக, அனைத்து பற்களும் விழுந்துவிடும். பொதுவாக, பற்கள் எல்லாமே தாடையிலுள்ள எலும்புகளின் பிடிமானத்தில்தான் இருக்கும். வயதாகும்போது, எலும்புகள் வலுவிழந்து உயரம் குறைய ஆரம்பித்தவுடன், பற்களின் ஆணிவேர் ஆட்டம் காணும். பின் பற்கள் எல்லாம் விழுந்து விடும்.'பாப்பிலன் லேபேப்ரி' குறைபாட்டை பொறுத்தவரை, அது எலும்பு பிரச்னையே தவிர, பற்களில் பாதிப்பு இல்லை. இப்பிரச்னையில், பற்கள் உறுதியாக இருந்தாலும், பற்களை தாங்கிப் பிடித்திருக்கும் எலும்புகளின் வலுவில்லாத் தன்மை, பற்களை சாய்க்கும்.இதற்கு, உடலில் வேறு பாகத்திலிருந்து எலும்புகளை எடுத்து, தாடையில் பொருத்தி, அவற்றில் செயற்கை பற்களை பொருத்துவதுதான் சிகிச்சை! அந்த சிகிச்சை பிரசன்னாவிற்கு இன்று நடந்திருக்கிறது. அவருடைய பிரச்னை இன்றோடு தீர்ந்து விட்டது. இனி, அவர் பழைய நம்பிக்கையுடன், தன் கனவுகளை நனவாக்கப் போராடலாம்.அரவிந்த் ராமநாதன், மரபணு ஆராய்ச்சியாளர்சென்னை.96000 24619