17 மே 2014 - ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
கடந்த, 30 ஆண்டுகளாக, பிரியாவின் குடும்ப மருத்துவர் என் கணவர். அதன் அடிப்படையில், பிரியாவை தெரியும். பிரியாவிற்கு வயது 27 ஆகிவிட்டது. தந்தையில்லை; தாய் மட்டுமே. பிரியாவின் தாய்க்கு, தன் மகள், திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாளே என்று கவலை. தன் மகள் பல ஆண்டுகளாக ஒருவனை விரும்புகிறாள்; இடைப்பட்ட நாட்களில் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்பது அவருக்கு தெரியும். பிரியாவின் அம்மா, 'அவளது திருமணம் குறித்து நீங்கள் பேசிப் பாருங்களேன்' என்று கேட்டார். பிரியாவை அழைத்துப் பேசியதில், 'என் காதல் முறிந்துவிட்டது. திருமணத்திற்கு பின், என் அம்மாவை தங்களுடன் வைத்துக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். காரணம், அவர் வீட்டிற்கு ஒரே பிள்ளை. தன் பெற்றோர்தான் தன்னுடன் இருக்க முடியும் என்று கூறிவிட்டார்' என்றாள். 'என் அம்மாவையும், தன்னுடன் வைத்துக் கொள்ளும்படியான, ஒரு வரன் வந்தால் திருமணம் செய்து கொள்கிறேன். காரணம், தந்தையில்லாமல் என் தாய் என்னை வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பது, எனக்கு தெரியும்' என்றாள். பிரியாவிற்கு, நண்பர் ஒருவர் மூலம் தமன் என்பவர் அறிமுகமானார். அவருக்கு தாய் இல்லை. அவர், பிரியாவை விரும்ப துவங்கினார். பழகிய மூன்று மாதங்களில் திருமணம் செய்து கொண்டனர். மூன்று மாதங்களில், ஒருவரின் குணாதிசயங்களை புரிந்து கொள்ள முடியாததால், இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். அதன் பாதிப்பாக, பிரியாவுடன் அவரது தாயார் இருக்கக் கூடாது என்று தமன் சொல்லியிருக்கிறார்.தமனுக்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லை. ஆனால், கொஞ்சம் முன்கோபி. இதை பிரியா புரிந்து கொள்ளாமல், தன் கணவன் தன்னிடம் கோபத்தை மட்டுமே காட்டுகிறார் என, தவறாக புரிந்து கொண்டுவிட்டார்.இதற்கிடையே, பிரியா கர்ப்பம் தரித்தார். நாளுக்கு நாள் இவர்களின் சண்டை வலுக்கவே, தான் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவே இல்லாமல், சரியாக சாப்பிடாமல், தன் கவலைகளை யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள்ளேயே போராட்டத்தோடு நாட்களை கழித்திருக்கிறார் பிரியா. அதனால், அவருக்கு மன உளைச்சலோடு உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்து கொள்ள, ஏழு மாதத்தில் அவரது குழந்தை, அறுவை சிகிச்சையின் மூலம் எடுக்கப்பட்டது. குறைப்பிரசவம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. தைராய்டு சுரப்பி குறைபாடு, மரபணு குறைபாடு, முந்தைய பிரசவம் குறைப்பிரசவமாக இருத்தல், கர்ப்பத்தின் போது ஏற்படும் உடல்நல குறைபாடுகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு போன்றவை சில காரணங்கள். இருந்தாலும், பிரியாவின் குறைமாத பிரசவத்திற்கு காரணம் மனஉளைச்சல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தமே. கர்ப்பிணிகள் எந்தவித பிரச்னையாக இருந்தாலும், அதை சம்பந்தப்பட்டோரிடம் பேசி, பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரியாவின் நிலையை போன்று மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு, உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும், வாய்ப்புகள் உள்ளன. இறைவன் கருணையில், குறைமாத குழந்தையாக இருந்தாலும், எந்தவித பிரச்னையும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக இருந்தான்.இனியாவது பிரியாவை புரிந்து வாழ்வை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டும் என, தமன் என்னிடம் கூறியதை கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு.