தீபாவளி வந்தாச்சு டோய்
தீபாவளிக்கு பலகாரம் சுடுவது குறித்து இப்போதே, 'டிஸ்கஷன்' ஆரம்பித்திருப்பீங்களே...! இதோ உங்களுக்காக டிப்ஸ்:* வெண்ணெயை காய்ச்சி இறக்குகையில், அரை ஸ்பூன் வெந்தயத்தைப் போட்டால், நெய் நல்ல மணமாயிருக்கும்.* நெய் வைத்திருக்கும் ஜாடியில், ஒரு துண்டு வெல்லத்தை போட்டு வைத்திருந்தால், நெய் மணம் மாறாமல் இருக்கும்.* பக்கோடா மொர மொரப்பாக இருக்க, மாவைக் கலக்கும் போது, சிறிதளவு நெய்யும், உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால் போதும்.* உளுந்த வடைக்கு, மாவை நைசாக அரைத்து, வேக வைத்த உருளை கிழங்கையும் சேர்த்து, பிசைந்து வடை தட்டினால், புஷ்... புஷ்... என்று, வடை வெகு ஜோராக இருக்கும்.* ரவா லட்டு செய்யும் போது, கையில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டை பிடியுங்கள். உருண்டையும் சுலபமாக இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.* அதிரசம், கடிப்பதற்கு மிருதுவாக இல்லாமல், கரடு முரடாக இருக்கிறதா? இட்லிக் குக்கரில் வைத்து, அவிய விட்டு எடுங்கள்.* வேர்க்கடலை உருண்டை செய்யும் போது, வெல்லப் பாகுடன், சிறிது சீனி சேர்த்து செய்தால், கரகரப்புடன் இருக்கும்.* முறுக்கு, காராபூந்தி, பிஸ்கட் வைக்கும் டின்களில், சிறிதளவு உப்பை, ஒரு துணியில் முடிந்து போட்டு வைக்கவும். நமத்துப் போகாமல், மொறு மொறுவென்று இருக்கும்.* தேன் குழல் செய்ய, மாவு அரைக்கும் போது, உருளைக்கிழங்கை வேகவைத்து, அதனுடன் சேர்த்து அரைத்தால், தேன் குழல், மிக மிக சுவையாக இருக்கும்.* அதிரசம் செய்யும் போது, சிறிது பேரிச்சம் பழம் கலந்து மாவைப் பிசையுங்கள். சுவை ஜோராக இருக்கும்.* தேன் குழல், சீடை ஆகியவற்றுக்கான மாவுடன், வெந்நீர் ஊற்றிப் பிசைந்தால், எத்தனை நாட்களானாலும், நமத்துப் போகாது.* மைசூர் பாகு செய்யும் போது, ஒரு பங்கு கடலைமாவுடன், இரண்டு பங்கு பயத்த மாவு கலந்து செய்யுங்கள். வாயில் போட்டவுடன் கரைந்து விடும்.* தேங்காய் பர்பி தயாரிக்கும் போது, தேங்காய் துருவலில் சிறிது பால் சேர்த்து, மிக்சியில் சிறிது நேரம் ஓடவிட்டு செய்யும்போது, பர்பிக்கு அதிக வெள்ளை நிறம் கிடைக்கும். இறக்கும் போது, சிறிது கடலை மாவைத் துாவி, கிளறி இறக்கினால் சுவை அதிகமாகும்.* 'இன்ஸ்டன்ட்' மாவு மூலம் குலோப் ஜாமூன் செய்யும் போது, மாவைக் கலக்கும் போது, சிறிது வெண்ணெய் சேர்த்தால், மிருதுவாக இருக்கும்.* பொரித்தெடுத்த ஜாமூன்களை சூடாக சர்க்கரைப் பாகில் சேர்க்காமல், நன்கு ஆறிய பின் சேர்க்கவும். ஜாமூன்கள் விரியாமல், கரையாமல் சுவையாக இருக்கும்.* டப்பாவில் கொஞ்சம் பச்சைக் கற்பூரத்தை, பேப்பரில் மடித்து வைத்து, மேலே லட்டுகளை வைத்தால், நல்ல வாசனையாக இருக்கும்.* எண்ணெய் பலகாரம் செய்யும் போது, எண்ணெய் பொங்கி வழிந்தால், கறிவேப்பிலையையோ, சிறிது புளியையோ போட்டு எடுத்து விட்டுப் பயன்படுத்தினால், எண்ணெய் பொங்குவதையும், காறல் வாசனையையும் தவிர்க்கலாம்.* சமையலறை மேடையில், எண்ணெய் கொட்டிப் பிசுக்காக இருந்தால், கடலை மாவைக் கெட்டியாக, தண்ணீரில் கரைத்துப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்துத் தேய்த்து கழுவ மேடை பளிச்சென்று இருக்கும்.* அரைத்த மாவு சற்று சூடாக இருக்கும் பட்சத்தில், காகிதத்தில் கொட்டிப் பரப்பி, சூடு நன்றாக ஆறிய பிறகே டப்பாவில் நிரப்பி வைக்கணும்.* ஏலக்காய் பொடித்து போட்ட பிறகு, அதன் தோலை குடிக்கும் நீரில் போட்டு விட்டால், மணமும், ருசியும் சேர்ந்து சுவையாக இருக்கும்.-வான்மதி