உள்ளூர் செய்திகள்

முதியோர் பேச்சு தடுமாறுகிறதா? மூளைச்சிதைவாக இருக்கலாம்

அந்த வீட்டின் ஜன்னல் கூட பத்மினியின் குரல் அறிந்திருக்கும். பட்டாசாய் வெடிக்கும் பேச்சு, நரை வந்த பிறகு, குளற ஆரம்பித்தது.ஒரு கட்டத்தில் அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை. மருத்துவரை அணுகிய போது தான், அது மூளைச்சிதைவு நோய் என தெரியவந்தது.''பல முதியோர் சந்திக்கும் பிரச்னை இது'' என்கிறார், அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை நிபுணர் முருகன்.வாய் குளறல் முக்கிய அறிகுறி. அப்போதே, சி.டி. ஸ்கேன் மூலம் மூளையில் அடைப்பு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இருப்போர், மூளை, இதயம் சார்ந்த பரிசோதனைகளை ஆண்டுக்கு ஒருமுறை எடுத்து கொண்டால், கண்டுபிடிப்பது சுலபம். சிகிச்சை உள்ளது. பயப்பட தேவையில்லை.வயது முதிர்வால் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து, செல்கள் அழிவதால், மூளை அளவு சுருங்கிவிடும். ரத்தம் தடைபடுவதால் ரத்த குழாய் வெடிப்பு, அடைப்பு ஏற்படலாம். மூளை உத்தரவிடாமல், உறுப்புகளால் செயல்பட முடியாது. இதனால் பக்கவாதம் ஏற்படலாம்.சிலருக்கு இதய குழாய்களில் இருந்து வெளியேறும் ரத்தம் கெட்டியாகி உறைந்துவிடலாம். இதனாலும் மூளைக்கு போதிய ரத்தம் செல்லாது. இ.சி.ஜி. பரிசோதனையில் இதயம் சார்ந்த பிரச்னைகளை கண்டறியலாம். ரத்தம் உறைவதை தடுக்கும் மருந்துகள் அளிக்கலாம்.தொண்டையில் புற்றுநோய் இருக்கிறதா எனவும் பரிசோதிக்க வேண்டும். இப்படி ஒரு பாதிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால், அலட்சியம் செய்யாமல் சிகிச்சை பெறவேண்டும் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !