விடாது கறுப்பு மஞ்சிட்டி
நமக்கு அழகை கூட்டிக் காட்டுவது நமது முகமே. முகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மனதின் போக்கை காட்டி விடும். மன்னர் ஆட்சி காலத்திலிருந்தே பலவகையான முகப்பூச்சுகளும், களிம்புகளும் வழக்கத்தில் இருந்து வந்தன. வெயிலிலும், கடும் சூட்டை தரக்கூடிய வெளிச்சத்திலும் பணிபுரியும் நாடக நடிகர்கள் கூட, முகத்தில் வெப்பத் தாக்குதலை தணிக்க, முகப்பூச்சுகளை பூசிக் கொள்வதுண்டு. இதை 'அரிதாரம் பூசுதல்' என்று கூறுவது வழக்கம்.அரிதாரம் என்னும் சித்த மருந்தின் மஞ்சள் நிறத்தை போன்றே முகப்பூச்சு காணப்படுவதால், முக சாயப்பொடியை அரிதாரம் என்று இன்றும் கூறுகின்றனர். நாம் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் ரோமத்திற்கு கறுப்பு நிறத்தைக் கொடுப்பதுடன், கடுமையான பாதிப்பையும் உண்டாக்குகின்றன. இவை மட்டுமின்றி சூரிய ஒளியிலுள்ள புறஊதாக் கதிர்களின் கடுமையான தாக்குதல் கூட முகம், கழுத்து மற்றும் கைகளை பாதிக்கின்றன. கோடை காலத்தில் வெயிலின் தாக்குதலால் கூட முகம், கை, கால்களில் கறுப்பு நிறம் உண்டாகிறது. மாதவிலக்கு முதிர்வு காலங்களில் முகம், கழுத்து போன்ற பகுதிகளிலுள்ள வியர்வை மற்றும் கொழுப்பு கோளங்களில் அடைப்பு ஏற்படுவதாலும், ஹார்மோன்களின் மாற்றத்தாலும் முகத்தில் நிறமாற்றம் ஏற்படுகிறது.இந்த நிறமாற்றமானது சிவப்பு நிற தோலுடையவர்களுக்கு நன்கு சிவந்தும், மாநிறமானவர்களுக்கு கறுத்தும் காணப்படுகிறது. கவலையின் அறிகுறியாகவும் முதுமையின் அடையாளமாகவும், முகத்தின் கறுப்பு காணப்படுகிறது. இதை வங்கு என்றும் மங்கு என்றும் நாட்டுப்புறங்களில் அழைக்கின்றனர். இவை தவிர, நீண்ட நேரம் கணினியை பார்ப்பதாலும், 'டிவி' பார்ப்பதாலும், மங்கிய வெளிச்சத்தில் புத்தகம் படிப்பதாலும் நீண்ட நேரம் இரவில் கண் விழிப்பதாலும் கண்களைச் சுற்றி கருவளையம் உண்டாகிறது. ஒவ்வாத மருந்துகள், முடி மற்றும் முகசாய அலர்சி, ஹார்மோன் மாத்திரைகள், வீரியமிக்க களிம்புகள், பிளாஸ்திரிகள், புறஊதாக் கதிர்வீச்சு, எக்ஸ்-ரே, புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் கதிர்வீச்சு, நாட்பட்ட சர்க்கரை நோய், கடுமையான பூஞ்சை தொற்று, தோல் வறட்சி, உடலில் நீர்ச்சத்து வற்றிப்போதல் மற்றும் பாரம்பரியம் காரணமாக முகத்தில் கறுப்பு மற்றும் வங்கு உண்டாகலாம். தோலில் தோன்றும் எந்த வகையான கறுப்பு நிறமாற்றம் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி, தோலுக்கு மினுமினுப்பையும், பளபளப்பையும் தரும் அற்புத மூலிகை மஞ்சிட்டி. ரூபியா கார்டிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரூபியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கொடிகளின் வேர் தோல் நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் வேரிலுள்ள ஆன்த்ரோகுயினோன்கள், பர்பியூரின், ஜான்தோ பர்பியூரின், மஞ்சிஸ்டின் மற்றும் அலிசானின் கூட்டுப்பொருட்கள் தோலில் தோன்றும் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் செல்களின் முதிர்வை தடுத்து, தோலுக்கு இயற்கையான நிறத்தை அளிக்கின்றன.நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மஞ்சிட்டி வேரை வாங்கி, ஒன்றிரண்டாக இடித்து, நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பெரும்பகுதி சுண்டியதும் வடிகட்டி, வெயிலில் காய வைத்து, மெழுகு பதத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இதை தேன் அல்லது தேன்மெழுகு சேர்த்து முகத்தில் கறுப்பு நிறமுள்ள இடங்களில் தடவி வர, குணம் உண்டாகும். 10 கிராம் மஞ்சிட்டி வேரை 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 125 மி.லி.,யாக சுண்டியபின் வடிகட்டி, தினமும் ஒரு வேளை குடித்துவர விரைவில் கறுப்பு நிறம் மாறும். மஞ்சிட்டி கசாயம், புங்கு இலைச்சாறு, புளியம்பட்டை கசாயம், கற்றாழைச்சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்து, கால் பங்கு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து, நீர்சத்து வற்றியதும் பதத்தில் வடிகட்டி, தேன்மெழுகு சேர்த்து களிம்பாக செய்து வைத்து கொள்ள வேண்டும். இதை முகம், கழுத்து, கை போன்ற இடங்களிலுள்ள கருமையான இடங்களில் தடவிவர குணம் உண்டாகும். சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் மஞ்சிட்டாதி கசாயம், 10 மி.லி., காலை உணவுக்கு முன் குடித்து வந்தாலும், முகத்தில் தோன்றும் கறுப்பு நிறமாற்றம் நீங்கும்.கேள்வி - பதில்திவ்யா, திருப்போரூர்: நான் நன்றாக தான் தூங்குகிறேன். ஆனால், எனக்கு எப்பொழுது பார்த்தாலும் கண்கள் எரிச்சலுடன், கண்ணீர் வடிந்துகொண்டே இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?நீலாஞ்சன மை என்னும் மருந்து அல்லது இளநீர் குழம்பு என்னும் கண் மருந்தை தொடர்ந்து மூன்று நாட்கள் கண்களில் விட்டு, குளிர்ந்த நீரால் கண்களை கழுவலாம். அசுககந்தா பலாலாட்சாதி தைலம் அல்லது சீரகத்தைலம் அல்லது பொன்னாங்கண்ணி தைலத்தால் தலை முழுகி வர, கண்ணீர்ப்பை பலமடையும். கண்களின் ஒவ்வாமை நீங்கும்.ஒற்றடம் கொடுப்பது பலன் தருமா?சித்த மருத்துவத்திற்கே உள்ள சிறப்பான சிகிச்சை முறை ஒற்றடமாகும். சூடான மண் ஓட்டை கையிலும், தலையிலும் வைத்து, பாண்டி விளையாடுவது பெண்களின் வழக்கம். சூடான ஓட்டால் உள்ளங்கை மற்றும் உச்சந்தலையில் ஒற்றடமிட மாதவிலக்கு சீராகும். அதுமட்டுமின்றி, கால்களை பிடித்து இழுக்கும் தசைப்பிடிப்பும் நீங்கும். ஆகவே, பெண்கள் 'டிவி' முன் அமராமல் மாலை நேரத்தில் இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது நல்லது. மண்சட்டியை நெருப்பிலிட்டும், முட்டை ஓட்டை சுட்டும், தவிடு, உப்பு, கருங்கல் தூள் போன்றவற்றை வறுத்தும் ஒற்றடமிடுவது வழக்கம். கட்டிகள் பழுக்க கம்பளி துணியை லேசாக சூடு செய்தோ அல்லது சூடான நீரில் முக்கியோ ஒற்றடமிடலாம். மார்பு சளியை வெளியேற்ற கோதுமை தவிட்டால் மார்பில் ஒற்றடமிடலாம். ஆமணக்கு விதையால் ஒற்றடமிட, பெண்களுக்கு மாதவிலக்கின் போது தோன்றும் வயிற்றுவலி நீங்கும். நல்லெண்ணெய் ஊறிய மண்விளக்கு சட்டியை சூட்டுடன் கன்னம், தாடைபோன்ற பகுதிகளில் ஒற்றடமிட, பல்வலி நீங்கும். எளிய பக்க விளைவுகள் இல்லாத இதுபோன்ற ஒற்றட முறைகளை பயன்படுத்துவதால், வீரியமிக்க மருந்துகளிலிருந்து தப்பிக்கலாம்.- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை