உள்ளூர் செய்திகள்

நீண்ட ஆயுளை தரும் தனிமம்

பழங்காலத்தில் இருந்தே ஜிங்க் எனப்படும் துத்தநாகத்தின் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் அறிந்து இருந்தனர். இது ஒரு தனிமம் என்பதை அறியும் முன்னரே, பித்தளை பாத்திரம் தயாரிப்பிலும், மருத்துவ தேவைகளுக்காகவும் பயன்படுத்தி உள்ளனர். இன்று இரும்பு, அலுமினியம், தாமிரத்திற்கு அடுத்து, நான்காவது இடத்தில் முக்கியமான தனிமமாக துத்தநாகம் உள்ளது. ஜிங்க் நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டால், உலக மக்கள் தொகையில் பாதி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு ஜிங்க் மிகவும் அவசியமான ஒன்று என்பது, பல ஆராய்ச்சிகளில் உறுதியான ஒன்று. பச்சிளங் குழந்தைகள், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர், கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள் என, அனைத்து தரப்பினருக்கும் இந்த நுண்ணுாட்டச் சத்து அவசியம். கொரோனா தொற்றுக்கு பின், ஜிங்க் செறிவூட்டப்பட்ட இணை உணவுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஜிங்க் சத்து குறைவால் மத்திய நரம்பு மண்டலம், செரிமான உறுப்புகள், தோல், இனப்பெருக்க உறுப்புகள், எலும்புகளில் குறிப்பிட்ட வகை கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தினசரி உணவில் போதுமான அளவு ஜிங்க் சத்து இருந்தால், டெஸ்டிரோஸ்டிரான் ஹார்மோன் சீராக சுரப்பதற்கு உதவும். இதனால் ஆரோக்கியமான மனநிலையுடன், தினசரி வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். 'டைப் - 2' சர்க்கரை கோளாறுக்கு ஜிங்க் குறைபாடும் ஒரு காரணம்.சரியான அளவில் ஜிங்க் உடலில் இருந்தால், 'இசட்என்டி8' என்ற எதிர்ப்பணுவைத் துாண்டி, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. கணையம் சுரக்கும் இன்சுலினை திறம்பட பயன்படுத்தும் திறனையும் உடம்பிற்கு அளிக்கிறது. தவிர, 'ரோடோப்சின்' என்ற நிறமி குறைபாட்டால், விழித்திரை பாதிக்கப்படுவதால் ஏற்படும் மாலைக்கண் நோயைத் தடுக்கிறது. தோல் வறட்சி, பருக்கள், முகம், தோலில் ஏற்படும் அனைத்தையும் கட்டுப்படுத்தி, சுருக்கங்கள் இல்லாது பளபளப்பான வைக்க உதவுகிறது. செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகவும், ஆரோக்கியமான செரிமானத்திற்கும் ஜிங்க் துணை செய்கிறது. நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் இருக்கும். வயது ஆக ஆக, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கும் 'தைமஸ்' சுரப்பியைத் துாண்டி, நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் வயதாவது தாமதமாகிறது. கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, நட்ஸ், முழு தானியங்கள், விதைகள், மாதுளம் பழம், பீன்ஸ், முட்டை, நண்டு ஆகியவற்றில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது.டாக்டர் சவுமித்ரா தாஸ், இயக்குனர்,தெற்காசிய னிங்க் நுண்ணூட்டச்சத்து முன்னெடுப்பு,சர்வதேச ஜிங்க் அசோசியேஷன், புதுடில்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !