மலரின் மகத்துவம்
ஒவ்வொரு மலரிலும் மணம் இருப்பதை போல், சில நோய் தீர்க்கும் மருத்துவ குணங்களும் உள்ளன.மாம்பூ: மாம்பூக்களை பறித்து, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து தொண்டையில் படும்படி கொப்பளித்தால், தொண்டை வலி குணமடையும். உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி 3 வேளை பருகி வர, வாய்ப்புண், வயிற்றுப்புண் மறையும்.புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் இட்டு மென்றால், பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து, இளஞ்சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால், பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.தென்னம்பூ: தென்னம் பூவை இடித்து சாறு பிழிந்து, 150 மி.லி., உடன், அதே அளவு எலுமிச்சை சாறு பிழிந்து கொடுத்து வந்தால் ரத்தபேதி, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு, நீர்ச்சுருக்கு தீரும். சிறுநீரை பெருக்கும். உடலின் வெப்பத்தை அகற்றும் தன்மை கொண்டது. பூவை மென்று சாப்பிட்டு வந்தால் வெள்ளைபடுதல், உட்காய்ச்சல், ரத்தவாந்தி, உடல் கொப்புளம் ஆகியவை தீரும்.வேப்பம்பூ: பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து, சிறிதளவு நீரில் கலந்து குடித்து வந்தால், வாதம், பித்தம், கபம் சமனப்படும். பூவை நிழலில் உலர்த்தி, வற்றல் குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும் போது சிறிதளவு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர, வயிறு உப்புசம், பித்தம், வாதம் தொடர்புநோய்கள் நீங்கும்.கல்லீரல் பாதுகாக்கப்படும். வேப்பம்பூ பொடியில், தேன் கலந்து தினம் 2 வேளை வீதம், 3 நாட்கள் உட்கொண்டு வந்தால், பித்தம் காரணமாக ஏற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம், போன்ற தொல்லைகள் நீங்கும். வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் தீரும். பூவை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால், பருமன் குறையும்.