குளிர்காலத்தில் கவனம்
குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம். குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டும். பேசுவதில் சிரமம் ஏற்படும். இருமல், வலியும் இருக்கும். ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஒட்டிக் கொள்ளும்.பனிக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது சைனசாக மாறுகிறது. மூக்கின் காற்றறைகளில் சளி சேருவதால் சைனஸ் பிரச்னை உண்டாகிறது. இதற்கு சுய மருத்துவம் செய்து கொள்வது தவறு. அது நோயை முற்றிலும் குணப்படுத்தாமல் தலைவலியை உண்டாக்கும். சைனஸ் மற்றும் மூக்குத் தண்டு வளைவு உள்ளவர்களுக்கு குளிர்கால பிரச்னைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். கைகளை கழுவிய பின்னரே எதையும் தொட வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம். சளி பிடித்திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க, திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.சாப்பிட்டால் நிவாரணம் புதினா ஜூஸ்: இஞ்சித் துருவல் 1 டேபிள் ஸ்பூன், புதினா இலை அரை கப் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் 1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் சர்க்கரைத்தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் கலந்து 3 நாள் வரை பயன்படுத்தலாம். தினமும் 1 கப் புதினா ஜூஸ் குடிப்பதால் சளியை உருவாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது.பிரிஞ்சால் ராய்தா. . .கத்தரிக்காய் 100 கிராம், புளிக்காத கெட்டி தயிர் கால் கப், பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் 1, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு எடுக்கவும். மேல் தோலை உரித்து விட்டு பிசைந்து கொள்ளவும். தயிர், வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளலாம். சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.